ஆலந்தூர் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் ஆர்.எஸ்.பாரதி
By dn | Published on : 11th March 2014 02:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

ஆலந்தூர் தொகுதி இடைத் தேர்தலில் திமுக சார்பில் வழக்குரைஞர் அணி செயலாளர் ஆர்.எஸ்.பாரதி போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை திமுக தலைவர் கருணாநிதி திங்கள்கிழமை (மார்ச் 10) வெளியிட்டார்.
கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன். அவர் தேமுதிகவிலிருந்து விலகியதுடன், சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகினார்.
அதனால் மக்களவைத் தேர்தலுடன் இணைத்து ஆலந்தூர் தொகுதிக்கும் ஏப்ரல் 24-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
அதிமுக சார்பில் ஆலந்தூர் தொகுதியில் அந்தப் பகுதியின் நகரச் செயலாளர் வி.என்.பி.வெங்கட்ராமன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஆலந்தூர் தொகுதி திமுக வேட்பாளராக வழக்குரைஞர் அணிச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
2.97 லட்சம் வாக்காளர்கள்: ஆலந்தூர் தொகுதியில் 2 லட்சத்து 97 ஆயிரத்து 631 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 705 பேர், பெண்கள் ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 914 பேர்.