Enable Javscript for better performance
இரும்புத் தாது வெட்டுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    
    pollice

    திருவண்ணாமலை அருகே கவுத்தி, வேடியப்பன் மலைகளில் இரும்புத் தாது வெட்டி எடுக்க முயலும் தனியார் நிறுவனத்தைக் கண்டித்து, பொதுமக்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதைத் தடுக்க வந்த காவல் துறையின் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இரு மலைகளிலிருந்து இரும்புத் தாது வெட்டி எடுக்க அனுமதி கேட்டு மத்திய, மாநில அரசுகளிடம் தனியார் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இம்மலைகளை அந்த நிறுவனத்தின் குழு பார்வையிட்டு ஆய்வு செய்தது. இரும்புத் தாது வெட்டி எடுக்க சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். கவுத்தி மலையில் ஆய்வு மேற்கொள்ள வந்த புவியியல் வல்லுநரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திங்கள்கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். இதற்காக, காலை 10 மணியளவில் இனாம்காரியந்தல், பாலியப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தோர் கவுத்திமலை அடிவாரத்தில் கூடினர்.

    தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீஸார் விரைந்து சென்றனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பொதுமக்கள் காவல் துறையினர் வந்த காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தினால் வழக்குப் பதிவு செய்து அனைவரையும் கைது செய்து சிறையில் அடைப்போம் என்று போலீஸார் எச்சரித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கோஷங்கள் எழுப்பிவிட்டு கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai