Enable Javscript for better performance
தமிழகத்தில் யாருடன் கூட்டணி? விரைவில் முடிவு செய்ய வேண்டும்: காங்கிரஸ் தலைமையிடம் ஜி.கே. வாசன் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தில் யாருடன் கூட்டணி? விரைவில் முடிவு செய்ய வேண்டும்: காங்கிரஸ் தலைமையிடம் ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

    By dn  |   Published on : 11th March 2014 06:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vasan

    மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி அமைப்பது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நல்ல முடிவை விரைவில் எடுக்க வேண்டும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் கேட்டுக் கொண்டார்.

    மீனவர் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் திங்கள்கிழமை காலை சந்தித்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

    மீனவர்கள் பிரச்னை குறித்துப் பிரதமரை சந்தித்துப் பேசினேன். தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீண்டும் அளிக்க வேண்டும் ஆகியவை குறித்து இலங்கை அரசுடன் இந்தியா கண்டிப்புடன் பேச வேண்டும் என்று வலியுறுத்தினேன். மேலும், விரைவில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையின்போது மீனவர் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண இதுவே நல்ல தருணம் என்றும் தெரிவித்தேன்.

    போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள், தமிழக மக்களின் உணர்வுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்றும் இவ் விவகாரம் குறித்து தெளிவு படுத்த வேண்டும் என்றும் பிரதமரிடம் கேட்டுக் கொண்டேன்.

    இலங்கை அரசுடன் தொடர்புடைய பிரச்னைகளுக்கு முழுமையான தீர்வு காணும் வரை, இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியா பயிற்சி அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்திக் கூறினேன். அதற்குரிய அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்து வருவதாக பிரதமர் என்னிடம் தெரிவித்தார்.

    தேர்தல் கூட்டணி: மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி அமைப்பது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதனால், தமிழக காங்கிரஸின் தேர்தல் பணிகள், வியூகங்கள் தடைபட்டுள்ளன; தாமதமாகிவருகின்றன. எனவே, கட்சியின் நலன், வருங்காலம், வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நல்ல முடிவை விரைவில் எடுக்க வேண்டும் என்பதுததான் தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள பெரும்பாலான தொண்டர்கள், தலைவர்கள் ஆகியோரின் எண்ணமாக உள்ளது. தமிழகத்தில் கூட்டணி அமைப்பது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்களும் உயர்நிலைக் குழுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.

    தமிழகத்தில் காங்கிரஸூக்கு நிரந்தர வாக்கு வங்கி உள்ளது. குறிப்பாக, கிராமப்புற பகுதிகளில் கட்சிக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை யாரும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது என்றார் ஜி.கே. வாசன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai