சுடச்சுட

    

    புதுச்சேரி தலைமைச் செயலரை மாற்றம் செய்வதற்கு இடைக்காலத் தடை கோரி பொதுநல வழக்கு

    By dn  |   Published on : 11th March 2014 04:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரியின் தலைமைச் செயலரை பணியிட மாற்றம் செய்ய மத்திய அரசுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக, புதுச்சேரியின் முன்னாள் எம்.எல்.ஏ., கே.தெய்வநாயகம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்: புதுசேரியில் நல்ல திட்டங்களை செயல்படுத்துவது மற்றும் நல்ல நிர்வாகம் செய்யக் கூடியதுமான மூத்த அதிகாரிகள் தொடர்ந்து பணியிட மாற்றம் செய்வது முக்கியமான பிரச்னையாக உள்ளது.

    அனைத்திந்தியப் பணியில் இருக்கும் மூத்த அதிகாரிகள் அந்தப் பதவியில் 2 ஆண்டுகள் நிறைவு செய்த பிறகே அவர்களை வேறு பதவிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என ஒரு வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இது போன்று அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வது, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது உள்பட அவர்களை வழி நடத்துவதற்கென சிவில் சர்வீஸ் வாரியம் அமைப்பதற்கு மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது,

    புதுச்சேரி தலைமைச் செயலராக சேத்தன் பூஷன் சங்கி கடந்த ஆண்டு மே மாதம் 15-ஆம் தேதி நியமிக்கப்பட்டார். அவர் பதவி வகித்து 9 மாதங்கள்தான் ஆகின்றன. இந்த நிலையில் கடந்த 5-ஆம் தேதி அவரை மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டது.

    இந்த நிலையில், அதே தேதியில் இந்தியத் தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தல் தேதியை அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. அப்போது அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்வது தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகும்.

    தேர்தல் அறிவிப்புக்கு முன்பு பணியிட மாற்றம் உத்தரவு வழங்கப்பட்டிருந்தாலும் இதுவரை அவர் மாற்றம் செய்யப்படவில்லை. அதே நேரம், தேர்தல் ஆணையத்திடம் சிறப்பு அனுமதி பெறாமல் அவ்வாறு செயல்படுத்த முடியாது.

    எனவே புதுச்சேரியின் தலைமைச் செயலரை பணியிட மாற்றம் செய்வதற்கு மத்திய அரசுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

    இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை (மார்ச் 10) விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரல் பி.வில்சன் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதிகள் மார்ச் 13-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai