Enable Javscript for better performance
ராஜபட்சவுக்கு துணை நின்ற காங்கிரஸூக்கு வாக்களிக்க கூடாது- Dinamani

சுடச்சுட

  

  ராஜபட்சவுக்கு துணை நின்ற காங்கிரஸூக்கு வாக்களிக்க கூடாது

  By dn  |   Published on : 11th March 2014 04:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vaijo_meet

  தமிழர்களுக்கு எதிரான போரில், இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு துணை நின்ற காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க கூடாது என மத்திய முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கூறினார்.

  மதிமுக சார்பில் மனித உரிமைகள் கருத்தரங்கம் எழும்பூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் யஷ்வந்த் சின்ஹா பேசியதாவது:

  இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் மனித உரிமைகள் அடிப்படை உரிமையாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, திபெத்தில் சீனா நடத்திய மனித உரிமை மீறலான செயல்கள் முதல் இலங்கையில் இதுநாள் வரை நடந்துவரும் மனித உரிமை மீறல் குற்றங்கள் வரை அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் உள்ளது. இதற்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் இயலாமைதான் காரணம்.

  வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அணுகுண்டு சோதனை நிகழ்த்தியதற்காக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவின் மீது பொருளாதாரத் தடை விதித்தன. அத்தடையை நீக்க வாஜ்பாய் யாரிடமும் கெஞ்சவில்லை. மாறாக அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனை இந்தியாவுக்கு வரவழைத்தார். கார்கில் போரின்போது பாகிஸ்தானுடன் சமாதானம் பேச அமெரிக்கா அழைத்தபோது அவர் அங்கு செல்லவில்லை. அந்த போரில் நாம் வெற்றி பெற்றோம்.

  ஆனால் இன்று, ஈழத் தமிழர் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்னையில் பிரதமர் மன்மோகன் சிங் ஒரு நொண்டி வாத்து போல் செயல்படுகிறார். அதனால்தான் இலங்கை இந்தியாவின் பேச்சை மதிப்பதில்லை. இந்த நிலை மாறி, சர்வதேச அளவில் இந்தியாவின் குரல் ஓங்கி ஒலிக்க, மோடி பிரதமராக வர வேண்டும். அதற்கு தமிழக மக்கள், இலங்கையில் நிகழ்ந்த இனப்படுகொலையில் ராஜபட்சவுக்கு துணை நின்ற காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கும், அந்த கூட்டணியில் அங்கம்வகித்த தமிழக கட்சிக்கும் மக்களவை தேர்தலில் வாக்களிக்கக்கூடாது. மாறாக, இந்த தேர்தலில் தமிழக மக்கள் காங்கிரஸூக்கு வாக்களித்தால் அது இலங்கையில் நடந்த இனப்படுக்கொலைக்கு இணையானது என்றார் அவர்.

  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசும்போது, உரிமைக்காக போராடுவோர், அடக்குமுறைக்கு எதிராக ஆயுதம் ஏந்தாமல் இருக்க வேண்டுமென்றால், அவர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஐ.நா. சபையின் மனித உரிமை பிரகடனம் வலியுறுத்துகிறது. ஆனால், நடைமுறையில் இந்த கோட்பாடு கடைபிடிக்கப்படவில்லை. இலங்கை இனப்படுக்கொலைக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்றார்.

  பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது, இலங்கையில் நிகழந்த இனப்படுக்கொலையில் சம பங்குள்ள காங்கிரûஸ மக்களவை தேர்தலில் தமிழக மக்கள் தண்டிக்க வேண்டும் என்றார்.

  காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் பேசும்போது, முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டும் அதே வேளையில், மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க, அடித்தளம் அமைத்த வைகோவை நாம் மறந்துவிடக்கூடாது. இனப்படுகொலை நிகழ்த்திய இலங்கையுடன் நட்பு பாராட்டுபவர்கள் இந்த தேர்தலில் படுதோல்வியை சந்திப்பார்கள் என்றார்.

  கருத்தரங்கில், மதிமுக துணைப் பொது செயலாளர் மல்லை சத்யா, பொருளாளர் மாசிலாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai