Enable Javscript for better performance
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: ஒரே நாளில் 10 லட்சம் பேர் விண்ணப்பம்- Dinamani

சுடச்சுட

    

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: ஒரே நாளில் 10 லட்சம் பேர் விண்ணப்பம்

    By dn  |   Published on : 11th March 2014 01:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    praveen_kumar

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) நடைபெற்ற ஒரு நாள் சிறப்பு முகாமில், 10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கடைசி வாய்ப்பாக, தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த முகாம் காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.

    தமிழகத்திலுள்ள 60 ஆயிரத்து 418 வாக்குச்சாவடிகளிலும் நடைபெற்ற சிறப்பு முகாமில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பதை சரிபார்த்ததுடன், புதிதாக பெயர் சேர்க்கவும் விண்ணப்பங்களை அளித்துள்ளனர்.

    தமிழகம் முழுவதும் எத்தனை பேர் விண்ணப்பங்களை அளித்தனர் என்பது குறித்த தகவல்கள் மாவட்ட வாரியாக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் மூலம் பெறப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் சுமார் 10 லட்சம் பேர் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ளனர்.

    இது குறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறுகையில், வாக்காளர் பட்டியலில் ஏற்கெனவே பெயர் இருந்தும் விண்ணப்பித்து இருக்க வாய்ப்புண்டு. எனவே, 10 லட்சம் விண்ணப்பங்களும், ஏற்கெனவே உள்ள வாக்காளர்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களுடன் இணையதளம் வழியாக சரிபார்க்கப்படும்.

    இந்த ஆய்வுக்குப் பிறகே, வாக்காளர் பட்டியலில் எத்தனை வாக்காளர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர் என்கிற முழு விவரம் கிடைக்கும் என்றார் அவர்.

    கிராம அளவிலான குழுக்கள்: பணம் வழங்குவதை தடுப்பது, அது குறித்து புகார்களைத் தெரிவிப்பது போன்றவற்றுக்காக அரசியல் சார்பற்ற குழுக்களை கிராமங்கள்தோறும் அமைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது, கட்டாயம் இல்லை என்பதால் விரும்பும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மூலமாக கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருவதாக தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார்.

    வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்: தமிழகத்தில் இப்போதைய நிலவரப்படி, 5 கோடியே 37 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில், 2.69 கோடி ஆண்கள் ஆவர். 2 கோடியே 68 லட்சம் பெண் வாக்காளர்கள் உள்ளனர். சிறப்பு முகாமின்போது பெயர் சேர்க்க 10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதன் மூலம், வாக்காளர் பட்டியலில் புதிதாகச் சேரும் வாக்காளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai