சுடச்சுட

  
  jaya_karunanidhi1

  மக்களவைத் தேர்தலில் திமுக - அதிமுக இடையே 35 தொகுதிகளில் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.

  மக்களவைத் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. முதல்வர் ஜெயலலிதா தொகுதி வாரியாக பிரசாரமும் செய்து வருகிறார். திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகள் போக, மீதம் உள்ள 35 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்கள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் 35 தொகுதிகளுக்கு திமுக - அதிமுக இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.

  9 எம்.பி.க்களுக்கு வாய்ப்பு இல்லை: 2009 மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் மொத்தம் 18 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் 8 பேருக்கு மட்டுமே மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. திமுகவிலிருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள மு.க.அழகிரி (மதுரை),ஆதிசங்கர் (கள்ளக்குறிச்சி) ஹெலன் டேவிட்சன் (கன்னியாகுமரி) ஜெயதுரை (தூத்துக்குடி) நெப்போலியன் (பெரம்பலூர்), பழநிமாணிக்கம் (தஞ்சாவூர்), ஜே.கே.ரித்திஷ் (ராமநாதபுரம்) சுகவனம் (கிருஷ்ணகிரி), வேணுகோபாலன் (திருவண்ணாமலை) ஆகிய 9 மக்களவை உறுப்பினர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. வேலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் அப்துல் ரகுமான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும், கடந்த முறை திமுக சார்பிலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

  இந்த முறை வேலூர் தொகுதி முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

  வடசென்னை தொகுதியிலிருந்து தென்சென்னைக்கு டி.கே.எஸ்.இளங்கோவனும், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தஞ்சாவூருக்கு டி.ஆர்.பாலுவும் தொகுதி மாறியுள்ளனர்.

  34 பேரும் பட்டதாரிகள்: திமுகவின் 35 வேட்பாளர்களில் 34 பேர் பட்டதாரிகள். அதில் வழக்குரைஞர்கள் 13 பேர். டாக்டர்கள் 3 பேர். பொறியாளர் ஒருவர். முதுகலைப் பட்டதாரிகள் 8 பேர். இளநிலைப் பட்டதாரிகள் 7 பேர் ஆவார்.

  வாரிசுகளுக்கு வாய்ப்பு இல்லை: திமுக அறிவித்துள்ள வேட்பாளர்களில் தூத்துக்குடி என்.பெரியசாமி மகன் ஜெகனுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

  33 சதவீதம் இல்லை: மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக வலியுறுத்திய வந்தது.

  ஆனால் திமுக வேட்பாளர்கள் பட்டியலில் செ.உமாராணி (சேலம்), பவித்திரவள்ளி (ஈரோடு) ஆகிய 2 மகளிருக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

  திமுக அறிவித்துள்ள வேட்பாளர்களில் மிகவும் இளம் வயது வேட்பாளர் பவித்திரவள்ளி(26) ஆவார்.

  73-வயதில் முதல் வாய்ப்பு

  திமுகவில் 70 வயதைக் கடந்தவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.பாலு(72), பொன்.முத்துராமலிங்கம் (74), எஸ்.முகம்மது ஜலீல் (70), சி.தேவதாசசுந்தரம் (72), எம்.செந்தில்நாதன் (73), கொ.நந்தகோபாலகிருஷ்ணன் (73) ஆகிய 6 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

  இதில் டி.ஆர்.பாலு, பொன்.முத்துராமலிங்கம் தவிர்த்து மற்ற 4 பேருக்கும் முதல் முறையாகப் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai