சுடச்சுட

    

    35 தொகுதிக்கு திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு: அழகிரி ஆதரவாளர்களுக்கு இடமில்லை

    By dn  |   Published on : 11th March 2014 05:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    dmk_list

    மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 35 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக் கட்சியின் தலைவர் கருணாநிதி திங்கள்கிழமை வெளியிட்டார்.

    ஆலந்தூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக சார்பில் வழக்குரைஞர் அணிச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி போட்டியிடுவார். தற்போது வெளியிடப்படும் வேட்பாளர் பட்டியல் முற்றிலும் முழுமையானது என்று சொல்ல மாட்டேன். ஒன்றிரண்டு திருத்தங்கள் வரக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    (கருணாநிதி வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் எவரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.)

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை வேட்பாளர்களை அறிவித்து, செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு கருணாநிதி அளித்த பதில்:

    3-வது அணியில் திமுக இடம்பெறுமா? ஜனநாயக ரீதியில் மதச்சார்பற்ற வகையில் எந்த அணி அமைந்தாலும், அதில் திமுகவின் பங்கு இருக்கும்.

    திமுக கூட்டணிக்கு கம்யூனிஸ்டுகள் வர வாய்ப்பில்லை என்று சொல்லமாட்டோம்.

    எனினும், கம்யூனிஸ்டுகளோடு பேச்சுவார்த்தை நடத்த தொடர்பு கொள்ளவில்லை. பத்திரிகைகள் வாயிலாக அவர்கள் வரக்கூடிய செய்தி வருவதை நான் அறிவேன். திமுக கூட்டணிக்கு இந்தத் தேதிக்குள் வரவேண்டும் என்று யாருக்கும் (கம்யூனிஸ்டுகளுக்கு) கெடு விதிக்க முடியாது.

    காங்கிரஸூடன் கூட்டணி உண்டா? காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடர்பாக பத்திரிகைகளில் செய்தி வரலாம். ஆனால், அது தொடர்பாக எந்தச் செய்தியும் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறோம்.

    மோடி அலை வீசுகிறதா?

    எனக்கு (கருணாநிதி) தெரிந்த வரையில் இங்கே வங்காள விரிகுடா அலையைத்தான் காணமுடிகிறது.

    மதச்சார்பற்ற ஒரு கட்சி இந்தியாவின் ஆளுங்கட்சியாக வருவதைத்தான் நானும், திமுகவும் விரும்புவோம் என்பதை அறிவீர்கள். எனவே, தனிப்பட்ட ஒருவரை (மோடியை) குறிப்பிட்டு, தேர்தலுக்குப் பிறகு அவரை நீங்கள் ஆதரிப்பீர்களா, மாட்டீர்களா என்றெல்லாம் என்னிடத்திலே பதில் பெறுவது என்பது சரியானது இல்லை.

    ஆ.ராசாவை மக்கள் ஏற்பார்களா? திமுகவின் 2 வேட்பாளர்கள் (ஆ.ராசா, ஜெகத்ரட்சகன்) மீது குற்றச்சாட்டுகள் இருக்கின்றன என்று நீங்கள் எப்படி நம்புகிறீர்கள்? போடப்பட்ட வழக்குகள் எல்லாம் இப்போது ஆடிக் கொண்டிருக்கின்றன. அந்த வழக்குகளை நிரூபிக்கக்கூடிய சாட்சிகள் இல்லை என்ற சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

    திமுகவின் தேர்தல் அறிக்கை செவ்வாய்க்கிழமை அண்ணா அறிவாலயத்தில் வெளியிடப்படும். தேர்தல் பிரசாரம் எப்போது தொடங்கப்படும் என்பது பிறகு அறிவிக்கப்படும்.

    மு.க.அழகிரி தனிக் கட்சி தொடங்குவாரா? தற்போது திமுகவின் வேட்பாளர்களை அறிவிக்கும் கூட்டம் நடைபெறுகிறது. எனவே, தேவையற்ற கேள்விகளைக் கேட்டு, என்னைப் புண்பட வைக்காதீர்கள். அவ்வளவுதான் சொல்வேன் என்றார் கருணாநிதி.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai