சுடச்சுட

    
    cadmk1

    "இரட்டை இலை சின்னத்தைக் கண்டு திமுக அஞ்சுகிறது; அதனால்தான் தமிழகத்தில் எங்கெல்லாம் இரட்டை இலை போல் தோற்றம் உள்ளதோ அதை மறைக்க வழக்கு தொடருகிறது' என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

    சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி (தனி) அதிமுக வேட்பாளர் மா.சந்திரகாசியை, ஆதரித்து சிதம்பரத்தில் அதிமுக பொதுச்செயலரும், முதல்வருமான ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை பேசியது:

    தமிழகத்தில் எங்கெல்லாம் இரட்டை இலை போன்ற தோற்றம் உள்ளதோ, அவற்றையெல்லாமல் மறைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்திருக்கிறார். தேர்தல் ஆணையத்திடம் திமுக சார்பில் மனுவும் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஸ்டாலினுக்கு கேள்வி: காங்கிரஸ் கட்சியின் சின்னம் கை. அதனால் அனைவரின் கையையும் வெட்டிவிட வேண்டும் என்றோ, கையுறை போட்டு மறைத்துக் கொள்ள வேண்டும் என்றோ கோரி மனு கொடுப்பாரா ஸ்டாலின்?

     சில கட்சிகளுக்கு சைக்கிள் சின்னம் இருக்கிறது. எனவே யாரும் சைக்கிள் ஓட்டக் கூடாது என மனு கொடுப்பாரா? ஒரு கட்சிக்கு மாம்பழம் சின்னம் உள்ளது. எனவே மாம்பழம் விற்பனையை தடை செய்ய வேண்டும் என மனு கொடுப்பாரா?

    "காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்' என்பது பழமொழி. அதேபோல அதிமுகவை கண்டு அஞ்சும் திமுகவினருக்கு எதைப் பார்த்தாலும் இரட்டை இலை போல் தோன்றுகிறது.

    மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசின் மாற்றாந்தாய் போக்கையும், திமுகவின் சதித் திட்டங்களையும் மீறி, எனது அரசின் தீவிர முயற்சிகளால் தமிழகம் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் மாநில அரசு மட்டுமே அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியாது.

    தமிழர்களுக்கு காங்கிரஸ், திமுக துரோகம்: மீனவர் பிரச்னை, நதிநீர் பிரச்னை, கச்சத்தீவு பிரச்னை, மண்ணெண்ணெய் ஒதுக்கீடு, நிலக்கரி ஒதுக்கீடு போன்ற பெரும்பாலான பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டிய அதிகாரம், மத்திய அரசிடம்தான் உள்ளது. தற்போதுள்ள காங்கிரஸ் அரசு, பிரச்னைகளுக்கு தீர்வு காணவில்லை. மாறாக தமிழர்களுக்கும், தமிழகத்துக்கும் துரோகம் செய்து கொண்டிருக்கிறது.

     இலங்கை அரசுக்குத் தேவையான ராணுவத் தளவாடங்கள் அளித்தும், ராணுவப் பயிற்சி அளித்தும், அங்குள்ள தமிழர்கள் அழியக் காரணமாக இருந்தது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு. இதற்கு உறுதுணையாக இருந்தது திமுக.

      போர்க் குற்றம் புரிந்தவர்களை போர்க் குற்றவாளிகள் என்று அறிவிக்க வேண்டும், இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், ஐக்கிய நாடுகள் சபை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும், இனப்படுகொலை செய்தவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கையை நட்பு நாடு என்று சொல்வதை நிறுத்த வேண்டும், தனி ஈழம் குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும், இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ஆனால் இதன் மீது காங்கிரஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்கும் திமுக வற்புறுத்தவும் இல்லை. 2008 ஆம் ஆண்டு கச்சத்தீவை மீட்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் தமிழக மீனவர்களுக்கு எதிராக மனுத் தாக்கல் செய்தது காங்கிரஸ் அரசு. தமிழர்கள் வாக்குகளைப் பெற்று, மைனாரிட்டி ஆட்சி அமைத்த கருணாநிதியும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை.

     உலகிலேயே நிலக்கரி படிவம் அதிகம் உள்ள நாடு இந்தியா. இந்த நிலக்கரியை வெட்டியெடுக்கும் உரிமையை தனியாருக்கு குறைந்த விலைக்கு அளித்து ஊழல் செய்துள்ளது காங்கிரஸ் அரசு. இந்த ஊழலை நீதிமன்றமும், தணிக்கைக் குழுவும் சுட்டிக்காட்டியுள்ளன.

    பாதுகாப்பற்ற பாதுகாப்புத் துறை: பாதுகாப்பு துறையையே, பாதுகாப்பற்றதாக்கி விட்டது காங்கிரஸ் அரசு. கடந்த 10 ஆண்டுகளாக ராணுவத் துறையை நவீனமயமாக்கும் நடவடிக்கைகள் எதையும் மத்திய அரசு செய்யவில்லை.

     மும்பை அருகே, சென்ற ஆண்டு கப்பற்படைக்குச் சொந்தமான நீர்மூழ்கி கப்பல் தீ விபத்துக்கு உள்ளாகி 18 வீரர்கள் இறந்தனர். 15 நாள்களுக்கு முன்பு இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் விபத்திற்குள்ளாகி இரண்டு வீரர்கள் மரணமடைந்தனர். 7 பேர் காயமடைந்தனர்.

    ப.சிதம்பரத்தின் பொறுப்பற்ற பதில்: இந்த விபத்தில் மரணமடைந்த அதிகாரியின் சகோதரி, ஏன் பாதுகாப்புத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கவில்லை என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் கேட்டபோது, "ஏராளமான நிதி பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்படுகிறது. அதனை பாதுகாப்புத் துறை விவேகத்துடனும், அறிவார்ந்த முறையிலும் செலவிடுவதில்லை. இதிலிருந்து முப்படைகளும் பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும்' என தனக்கே உரிய பாணியில் பதில் தெரிவித்துள்ளார்.

     இந்த விஷயத்தில் மத்திய அமைச்சரவைக்கு கூட்டுப் பொறுப்பு உண்டு என்பது கூட தெரியாமல், பாதுகாப்புத்துறை சரியாக செயல்படவில்லை எனக் கூறியுள்ளார். இதிலிருந்து மத்திய அரசின் துறைகள், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல், தனித்தனியே இயங்கி வருவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

     மற்ற நாடுகளுக்கு வழிகாட்டியாக இந்திய பாதுகாப்புத் துறை விளங்கத் தேவையான நடவடிக்கைகளை அதிமுக எடுக்கும் என வாக்குறுதி அளிக்கிறேன். அண்டை நாடுகளின் சவால்களை சமாளிக்கும் வகையில் முப்படைகளுக்கு தேவையான நவீன ஆயுதங்கள், தளவாடங்கள் வாங்கப்படும். மொத்தத்தில் வல்லரசு நாடுகளுக்கு இணையாக பாதுகாப்புத் துறை பலப்படுத்தப்படும். இதன் மூலம் தேசத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

    மத்தியில் வேண்டும் ஆட்சி மாற்றம்: வருகிற நாடாளுமன்றத் தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல. இந்திய நாட்டின் தலைவிதியை மாற்றி அமைக்கக்கூடிய தேர்தல். நம்முடைய துயரங்களை தீர்க்க வகை செய்யும் தேர்தல்.

     இந்தியா பிரகாசமாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு தேவை மத்தியில் ஆட்சி மாற்றம். அந்த மாற்றத்தை உருவாக்கித் தர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

     தற்போது மத்தியில் உள்ள மக்கள் விரோத, ஊழல் காங்கிரஸ் ஆட்சியை அகற்றி, மக்கள் நலம் காக்கும் அதிமுக ஆட்சியை நிலைநாட்டுங்கள். அப்போதுதான் தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும், நலன்கள் பாதுகாக்கப்படும், தமிழக மக்களின் வாழ்வு வளம் பெறும் என்றார் ஜெயலலிதா.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai