தனியார் துறையில் இடஒதுக்கீடு தேவை: திமுகவின் தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தல்
By dn | Published on : 12th March 2014 03:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

மத்திய அரசு அலுவலகங்கள் தமிழில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்ற வேண்டும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டார். அந்த அறிக்கையில் கூறியிருப்பது:
மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ்: தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இணை ஆட்சி மொழியாக தமிழ் மொழி பிரகடனம் செய்யப்படும். மத்திய அரசின் அலுவலகங்கள், நிறுவனங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஆகியவை தமிழிலேயே செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழ் மொழியை ஏற்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவோம்.
மத்திய அரசுப் பணிகளுக்கும் மத்திய தேர்வு வாரியம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் நடைபெறும் பணியாளர் தேர்வுகளுக்கும், அந்தந்த மாநில ஆட்சி மொழிகளாக உள்ள இந்திய மொழிகளை இணைத்து எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவோம்.
கூட்டாட்சிக்கான சட்டம்: மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசுகளைக் கலைக்கும் அரசியல் சட்டத்தின் 356 பிரிவு அறவே நீக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து திமுக வலியுறுத்தும். மாறி வரும் உலகப் பொருளாதாரம், சமூக, அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, மாநிலங்கள் அனைத்து உரிமைகளோடு செயல்படவும், மாநில சுயாட்சிக் கொள்கை வெற்றி பெறவும் தேவையான அரசியல் சட்டத்திருத்தம் செய்ய திமுக பாடுபடும்.
மதச்சார்பின்மைக்குத் துணை: மதவெறி காரணமாக எந்த மதத்தைச் சார்ந்தவர்களாலும், எந்த ஒரு மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் எவ்விதத் தீங்கும் ஏற்படுமானால், அதனை முறியடிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு துணை நின்று காப்பாற்றவும் திமுக தயங்காது.
தனியார் துறையில் இடஒதுக்கீடு: பொதுத் துறை நிறுவனங்கள், படிப்படியாக தனியார் மயமாக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, இனிமேல் தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டு முறையை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும். அப்படி வழங்குவது மட்டுமே சமூகநீதியின் நியாயமான முழுமையான வெளிப்பாடாகும். இதுபோன்ற இடஒதுக்கீடுகள் நீண்ட காலமாக அமெரிக்க ஐக்கிய குடியரசில் நடைமுறையில் உள்ளன.
எனவே, தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டு முறையை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென மத்திய அரசை திமுக வலியுறுத்தும்.
தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நாடாளுமன்றத்தில் விவாதித்து மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. பிறகு வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோரை மட்டும் கணக்கெடுப்பு நடத்தியது. வறுமைக் கோட்டுக்கான அளவுகோல் அடிக்கடி மாறக்கூடியது.
எனவே, முழுமையான சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்.
பிற்படுத்தப்பட்டோரில் பொருளாதார ரீதியாக மேல்தட்டு மக்கள் என்று கருதப்படுவோருக்கு இடஒதுக்கீடு மறுக்கப்படுவதும், சமூக நீதிக்குப் புறம்பானவை என்பதால் அதனை மாற்ற சட்டத்திருத்தம் கொண்டுவர திமுக வலியுறுத்தும்.
தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டு விகிதாச்சாரத்தை அந்தந்த மாநிலங்களே நிர்ணயித்துக் கொள்ளும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதிகளாக தாழ்த்தப்பட்டோரை நியமனம் செய்ய வேண்டும்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் மற்றும் பழங்குடியினர் கிறிஸ்துவ மதத்துக்கு மாறினாலும் அவர்களுக்கு உரிய சலுகை வழங்க திமுக வலியுறுத்தும்.
சச்சார் குழு பரிந்துரையின் அடிப்படையில் பட்டியலின சாதியினருக்கு இருப்பதுபோல் சிறப்பு உட்கூறு திட்டம் இஸ்லாமியர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கென நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தும். அயல்நாட்டுத் தூதர்களாக தமிழர்களை நியமனம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.