Enable Javscript for better performance
தமிழக-இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை நாளை நடைபெறுமா? மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழக-இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை நாளை நடைபெறுமா? மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

    By dn  |   Published on : 12th March 2014 05:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tn

    இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 177 தமிழக மீனவர்களை விடுவிக்கவும் அவர்களது 44 படகுகளை மீட்கவும் இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா என மத்திய வெளியுறவுத் துறை இணைச் செயலர் சுசித்ரா துரையை தமிழக அரசு கேட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து தமிழக மீனவர்களை சிறையில் இருந்து விடுவிப்பதில் இலங்கை அரசு தொடர்ந்து மெத்தனம் காட்டி வரும் நிலையில், இலங்கை மீனவர்களுடனான பேச்சுவார்த்தை ஏற்கெனவே திட்டமிட்டபடி இலங்கையில் வியாழக்கிழமை (மார்ச் 13) நடைபெறுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

    இது தொடர்பாக தமிழக அரசின் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) இரவு வெளியாகியுள்ள மீனளத் துறையின் செயலர் எஸ்.விஜயகுமாரின் கடித விவரம்:

    இலங்கை-தமிழக மீனவர் பிரச்னை தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து, தமிழக-இலங்கை மீனவர்களிடையே முதல் கட்ட பேச்சுவார்த்தை கடந்த ஜனவரி 27-ஆம் தேதி நடைபெற்றது.

    இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கும் நிலையில் மட்டுமே தமிழக-இலங்கை மீனவர்களிடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இலங்கையில் மார்ச் 13-ஆம் தேதி நடைபெறும் என ஏற்கெனவே கூறப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் குறித்த விவரம் மத்திய அரசுக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டு விட்டது.

    எனினும் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 177 தமிழக மீனவர்களை விடுதலை செய்வது தொடர்பாகவும், இலங்கை அரசு பறிமுதல் செய்து வைத்துள்ள அவர்களது 44 படகுகளை திரும்ப ஒப்படைப்பது தொடர்பாகவும் தமிழக அரசுக்கு இதுவரை தகவல் எதுவும் இல்லை. ஆனால், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டுமானால், தமிழக மீனவர்களை விடுவிப்பது, படகுகளை திரும்ப ஒப்படைப்பது ஆகியவற்றை இலங்கை அரசு செய்வது அவசியமாகும். எனவே இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கவும் அவர்களது படகுகளை மீட்கவும் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து அறிய விரும்புகிறேன்'' என்று சுசித்ரா துரைக்கு எழுதியுள்ள கடிதத்தில் விஜயகுமார் கூறியுள்ளார்.

    சென்னையில் மீனவர்களின் பாஸ்போர்ட்: இது குறித்து மீனவ சங்கப் பிரதிநிதிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது: ""நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையைச் சேர்ந்த 13 மீனவர்கள் இலங்கையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்பார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக, எங்களது பாஸ்போர்ட்டுகளை மீனளத் துறை அதிகாரிகள் பெற்று, சென்னையில் உள்ள மீன்வளத் துறை தலைமை அலுவலகத்தில் அளித்துள்ளனர்.

    திருச்சியில் இருந்து விமானம் மூலம் இலங்கை செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், அது குறித்த முறையான அழைப்பும் பயணச்சீட்டுகளும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) இரவு வரை எங்களிடம் அளிக்கப்படவில்லை. புதன்கிழமை (மார்ச் 12) பிற்பகலுக்குள் பேச்சுவார்த்தையின் நிலைமை குறித்து தெரிய வரும் என்று கூறினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai