சுடச்சுட

    

    தேர்தல் சிறப்பு பறக்கும் படை சோதனை: 7 கிலோ தங்கம், ரூ.1.74 கோடி பறிமுதல்

    Published on : 12th March 2014 02:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ved11ph2

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் சிறப்பு பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனையில், 7 கிலோ தங்கம் மற்றும் ரூ.1.74 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் நகைகளை தேர்தல் சிறப்பு பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    வேதாரண்யம்: அந்த வகையில், நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே திங்கள்கிழமை இரவு அதிகாரிகள் நடத்திய சோதனையில், தொண்டியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்தில் ஒரு பையில் ரூ.2.16 கோடி மதிப்புள்ள 7.218 கிலோ எடையுள்ள 22 தங்கக் கட்டிகள் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து, தங்கத்தை கொண்டு சென்ற, கோட்டைப்பட்டினம் சத்திரம் தெருவைச் சேர்ந்த காதர் முகைதீன் மகன் அம்ஜத்கான் (26) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

    துறையூர்: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பகளவாடி எல்லையில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், திருச்சி நோக்கிச் சென்ற துறையூரைச் சேர்ந்த பொறியாளர் ரவியின் காரில் இருந்து ரூ.21.61 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

    பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த பார்த்திபனூர் பகுதியில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், கார்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.3.5 லட்சம் ரொக்கமும், 300 டிபன் பாக்ஸ்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    தா.பழூர்: அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே சோதனையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், வேனில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.6 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

    கன்னியாகுமரி: நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் ரூ.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.  கன்னியாகுமரி-திருநெல்வேலி சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த அதிமுக பிரமுகர் கனகராஜ் என்பவரிடம் இருந்து ரூ.5 லட்சமும், நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே அத்தியூரில், கேரளத்திலிருந்து வந்த காரிலிருந்த வியாபாரி கோமதிநாயகம் என்பவரிடமிருந்து ரூ.1.47 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டன.

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்த இடைச்சிவிளை பேருந்து நிலையம் அருகே ஒரு காரை வழிமறித்து சோதனை செய்ததில், கார் தரகர் குணராஜனிடம் இருந்து ரூ.62 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    திண்டுக்கல்: திண்டுக்கல் உழவர் சந்தை அருகே சீலப்பாடி நோக்கிச் சென்ற காரிலிருந்து தனியார் பள்ளித் தாளாளர் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான ரூ.2.54 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

    அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையை அடுத்த பந்தல்குடி அருகே உள்ள ராம்கோ நகர் பாலத்தில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, தூத்துக்குடியிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற ரகில்வால் என்பவரின் காரிலிருந்து ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரை: மதுரை மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற சோதனையில், ரூ.73.45 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    ஆண்டிப்பட்டி: ஆண்டிப்பட்டி அருகே வருசநாடு சாலையில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் இரு சக்கர வாகனத்தில் இரும்புப் பெட்டியில் கொண்டு வரப்பட்ட ரூ.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், அந்தப் பணம், தேனியிலுள்ள ஒரு வங்கியிலிருந்து சுடமலைக்குண்டில் உள்ள வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது என்பதற்குரிய ஆவணங்களைக் காட்டி அந்தப் பணத்தை பெற்றுச் சென்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai