சுடச்சுட

    

    பாஜக கூட்டணி: தொகுதிப் பங்கீடு 14-இல் இறுதி செய்யப்படும்- இல.கணேசன்

    By dn  |   Published on : 12th March 2014 04:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    elaganesan

    பாஜக கூட்டணியில் மார்ச் 14-ஆம் தேதி தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் என அக்கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்தார்.

    பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. இக்கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவது தொடர்பாக பாஜக தலைவர்கள் தீவிரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

    மார்ச் 7-ஆம் தேதி பாஜக அலுவலகமான கமலாலயத்தில் பாஜக-பாமக இடையே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பாமக சார்பில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

    7-ஆம் தேதி மாலை தேமுதிக அலுவலகத்தில் பாஜக-தேமுதிக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. 8-ஆம் தேதி பாஜக அலுவலகத்துக்கு வந்த தேமுதிக இளைஞரணித் தலைவர் எல்.கே.சுதீஷ், வி.சி.சந்திரகுமார், அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோர் பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.மோகன்ராஜூலு உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில், உடன்பாடு ஏற்படாததால், திங்கள்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேமுதிக சார்பில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் அழகாபுரம் மோகன்ராஜ், வெங்கடேசன், அருள்செல்வன், பாஜக சார்பில் மூத்த தலைவர் கே.என்.லட்சுமணன், மாநிலப் பொதுச் செயலாளர் சரவணப் பெருமாள், துணைத் தலைவர் சக்கரவர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.

    குறிப்பிட்ட சில தொகுதிகளை இரண்டு கட்சிகள் கேட்பதால் தொகுதிகளை இறுதி செய்வதில் இழுபறி நீடிப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக கள்ளக்குறிச்சி தொகுதியில் எல்.கே.சுதீஷை நிறுத்த தேமுதிக விரும்புகிறது. ஆனால், அங்கு இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர் போட்டியிட விரும்புகிறார்.

    ஆரணி அல்லது அரக்கோணத்தை தேமுதிக கேட்கிறது. இந்த இரண்டையும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்கிறது பாமக. சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி இந்த மூன்றில் ஒன்றை தேமுதிக கேட்கிறது. ஆனால், பாமக மறுக்கிறது. இதனால் பாஜக கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    பாஜக அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் கூட்டணியில் சிக்கல் இருப்பதை ஒப்புக் கொண்டார்.

    மேலும் அவர் பேசும்போது, ஒரு சில தொகுதிகளை இரண்டு கட்சிகள் கேட்பதால் தொகுதிகளை இறுதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும், இந்த சிக்கலுக்கு விரைவில் முடிவு காணப்படும். மார்ச் 14-ஆம் தேதி பாஜக கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai