சுடச்சுட

    
    tpkpolice

    மதுரை அருகே கடந்த பிப்ரவரியில் தனியார் பல்பொருள் அங்காடியின் பின்பகுதியில் மீட்கப்பட்ட இரும்புக் குழாய் வெடிகுண்டு வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

    அவர்கள் அளித்த தகவலின் பேரில், 4 வெடிகுண்டுகள் உள்ளிட்டவையும் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    மதுரை உத்தங்குடி அருகே தனியார் பல்பொருள் அங்காடியின் பின்பகுதியில் கடந்த பிப்ரவரி 11-ம் தேதி மாலையில் இரும்புக் குழாயில் 2 வயர்கள் இணைக்கப்பட்டும், அருகே குடிநீர் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பப்பட்டும் இருப்பதை காவலாளி அருள் ஜேசுதாஸ் கண்டறிந்தார். இதுகுறித்து அங்காடியின் மேலாளர் சிவதாணு அளித்த புகாரின் பேரில், யா.ஒத்தக்கடை போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

    மீட்கப்பட்ட வெடிகுண்டு சோதனையிடப்பட்டதில், இரும்புக் குழாய் 36 சென்டிமீட்டர் நீளமும், 12 சென்டிமீட்டர் சுற்றளவும் இருந்தது. அதனுள்ளே 19 ஜெலட்டின் குச்சிகளும், 3 கிலோ ஜெல் வகை வெடிபொருளும் இருந்தன. குழாய் குண்டு மொத்தம் 7 கிலோ இருந்ததாக போலீஸார் கூறினர்.

    மதுரையில் மீட்கப்பட்ட குழாய் குண்டானது, புதுச்சேரியில் மத்திய அமைச்சர் நாராயணசாமி வீட்டில் மீட்கப்பட்ட குழாய் குண்டு போல இருந்தது. ஆனால், புதுச்சேரியில் எலக்ட்ரிக் டெட்டனேட்டர் இருந்ததாகவும், மதுரையில் சாதாரண டெட்டனேட்டர் இருந்ததாகவும் கூறப்பட்டது.

    இதனால் கியூ பிராஞ்ச் மற்றும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் வெடிகுண்டு பொருள்களையும், அமைப்பையும் சோதனையிட்டு ஆய்வு செய்தனர். அதன்படி, தமிழ் தீவிரவாத அமைப்பினருக்குத் தொடர்பிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.

    இந்த நிலையில், 3 நாள்களுக்கு முன்பு சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் மேலூர் சாலையில சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள பூவாச்சிபட்டியைச் சேர்ந்த திருச்செல்வத்தைப் பிடித்தனர். அவர் தந்த தகவல்படி, மேலூரில் பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் தங்கியிருந்த சாக்கோட்டை தங்கராஜ் என்ற தமிழரசன், ஆண்டக்குடியைச் சேர்ந்த கவியரசு என்ற ராஜா ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7 மீட்டர் வயர் மற்றும் 2 லேப்டாப்புகள், 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தங்கராஜ் திரைப்பட இயக்குநர் என்றும் கூறப்படுகிறது.

    பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையின்படி, மதுரை வில்லாபுரம் வாசுகி தெருவில் உள்ள வீட்டில் சோதனையிட்டனர். அங்கு 2 திரி பொருத்தப்பட்ட வெடிகுண்டுகள், 2 இரும்பு பைப் வெடிகுண்டுகள், 6 ஜெலட்டின் குச்சிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. சோதனையின்போது அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, மக்கள் செல்ல அனுமதிக்கவில்லை.

    இதுகுறித்து காவல் துறை கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதரியிடம் கேட்டபோது, வெடிகுண்டு வழக்கில் விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai