Enable Javscript for better performance
யாருக்கு எந்தத் தொகுதி? பாஜக கூட்டணியில் தொடரும் சிக்கல்- Dinamani

சுடச்சுட

  

  யாருக்கு எந்தத் தொகுதி? பாஜக கூட்டணியில் தொடரும் சிக்கல்

  By dn  |   Published on : 12th March 2014 04:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vvr

  முரண்பட்டிருந்த தேமுதிக, பாமக, மதிமுக ஆகியவை தற்போது ஓரணியில் இணைந்துள்ளன. விஜயகாந்த், வைகோ, ராமதாஸ் ஆகியோர் இணைந்து ஒரே மேடையில் ஏறுவார்களா?

   2016-ல் முதல்வராக வேண்டும் என்று துடிப்பவர்களால், இணைந்து பிரசாரம் செய்ய முடியுமா?

  கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது என்பதிலேயே மூவருக்குள் அடிதடி ஏற்படும் என்றெல்லாம் கருத்துகள் வெளிவந்தன. ஆனால், பாஜக கூட்டணியில் தற்போது இதுபோன்ற பிரச்னையே எழவில்லை என்பதே உண்மை.

   " " ஊருக்குப் போக ஒரே பஸ்தான் இருக்கிறது என்றால், அந்தப் பஸ்ஸில்தானே அனைவரும் பயணிப்பர். முரண்பட்ட ஒருவர் ஏறிவிட்டார் என்பதற்காக யாராவது இறங்கிவிடுவார்களா? அதுபோலத்தான் பாஜக கூட்டணியில் அனைவரும் பயணிக்கத் தொடங்கிவிட்டோம். தற்போது தொகுதி தொடர்பான் பிரச்னையே தவிர, வேறு பிரச்னை இல்லை '' என்கிறார் தேமுதிகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவர்.

  பாஜக கூட்டணியில் தேமுதிகவுக்கு 14 தொகுதிகளும், பாமகவுக்கு 8 தொகுதிகளும், மதிமுகவுக்கு 7 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை விவகாரத்திலும் பிரச்னைகள் இருக்கின்றன.  எனினும் அதை சமரசம் செய்துகொள்ள 3 கட்சிகளும் தயாராகவே இருக்கின்றன.

  ஆனால் வட மாவட்டங்களில் பலம் வாய்ந்த கட்சிகளாக கருதப்படும் தேமுதிகவும் - பாமகவும் ஒரே தொகுதிகளைக் கேட்பதாலே பாஜக கூட்டணியில் இடியாப்பச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

  கடந்த மக்களவைத் தேர்தலில் தேமுதிக 9 தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்றன.

  இந்த தொகுதிகளில் மீண்டும் தேமுதிக போட்டியிட விரும்புகிறது. குறிப்பாக அரக்கோணம், ஆரணி, சிதம்பரம், விழுப்புரம், வேலூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட தொகுதிகளை மீண்டும் பெற முயற்சிக்கின்றன.

  இதில் வேலூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட தொகுதிகளை தேமுதிக விட்டுக் கொடுக்க முடிவு செய்துள்ளது.

  அருகருகே உள்ள தொகுதிகளான அரக்கோணம், ஆரணியிலிருந்து ஒன்றையும், சிதம்பரம், விழுப்புரத்தில் இருந்து ஒன்றையும் தேமுதிக கேட்டு வருகிறது.

  இதனை பாமக ஏற்க மறுத்து வருகிறது.

  வெற்றி தொகுதியை எப்படித் தரமுடியும். எங்கள் சார்பில் ஏற்கெனவே 10 தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்துவிட்டோம். பிரசாரமும் செய்து வருகிறோம். இப்போது பின் வாங்க முடியுமா என்று பாமகவினர் கேட்கின்றனர்.

  இது தொடர்பான பிரச்னையே இன்னும் இறுதி செய்யப்படாமல் இழுத்துக் கொண்டிருக்கிறது.

  மேலும் கள்ளக்குறிச்சி தொகுதியில் சுதீஷை வேட்பாளராக தேமுதிக திட்டமிட்டு வருகிறது. இந்தத் தொகுதியை இந்திய ஜனநாயகக் கட்சி கேட்டு வருகிறது.

  அதைப்போல மதிமுக கேட்கும் ஈரோடு தொகுதியைக் கேட்டும் கூட்டணியில் கட்சிகளுக்குள் பிரச்னை நிலவுகிறது.

  பாஜக கூட்டணி முறிந்துவிட்டது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருணாநிதியைச் சந்திக்கச் செல்கிறார் என்று கடந்த இரண்டு நாள்களாகச் செய்தி வருகின்றன.

  ஆனால் அது அனைத்தும் புரளி என்று தேமுதிக தரப்பு கூறுகிறது.

  தேமுதிக போட்டியிடும் 14 தொகுதிகளுக்கு மட்டும் பிரசாரம் செய்வதாக விஜயகாந்த் அறிவிக்கவில்லை. 40 தொகுதிகளுக்கும்தான் பிரசாரம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். இதிலிருந்தே கூட்டணி கட்சிகளுக்காகவும் விஜயகாந்த் பிரசாரம் செய்ய உள்ளார் என்பதை புரிந்துகொள்ளலாம் என்று தேமுதிகவினர் கூறுகின்றனர்.

  மேலும் பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன், கூட்டணியில் தொகுதி தொடர்பான சிக்கல் இருக்கிறது என்றாலும், ஓரிரு தினத்தில் உடன்பாடு எட்டிவிடும் என்று கூறினார்.

   

  அய்யோ போட்டு உடைத்துவிட்டாரே!
  தமிழகத்தில், பாஜக தலைமையில் மதிமுக, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் இடையே  கூட்டணி உறுதியாகிவிட்டாலும், இந்த கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

  இந்த நிலையில் மதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர் தமிழ் மறவன் எழுதிய அரசியலில் வைகோ ஓர் அதிசயம் எனும் நூல் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.

  அந்த விழாவில் வைகோவை புகழ்ந்து பேசிய தமிழ் மறவன், தமது பேச்சின்போது திடீரென உணர்ச்சிவசப்பட்டவராய், இப்போதுகூட கட்சி தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று மக்களவைத் தேர்தலில் விருதுநகரில் போட்டியிட வைகோ ஒப்புக்கொண்டுள்ளார் என்றார்.

  வைகோ தேர்தலில் போட்டியிடுவது முக்கிய அறிவிப்பாக வெளிவரவேண்டிய செய்தி. 

  அதைப் போகுற போக்கில் சொல்வதைப் போல சர்வசாதாரணமாக சொல்லிவிட்டாரே மனுஷன்.

  இவரை இன்னும் கொஞ்ச நேரம் பேசவிட்டால், கூட்டணியில் நம்ம கட்சிக்கு எவ்வளவு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  அந்த இடங்களில் யாரெல்லாம் போட்டியிடுகிறார்கள்ன்னு எல்லா விஷயத்தையும் தலைவருக்கு முன்னாடியே மேடையில சொல்லிடுவார் போலிருக்கே என, தொண்டர்கள் சிலர் முணுமுணுக்க அடுத்த சில நிமிடங்களில் தமது பேச்சை முடித்துக் கொண்டார் தமிழ் மறவன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai