சுடச்சுட

    
    c11dmanu

    திமுக தேர்தல் அறிக்கையில் 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கையை கருணாநிதி செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.

    அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களைப் போல, அகில இந்திய அளவில் 10-ஆம் வகுப்பு வரை படித்த 10 லட்சம் மகளிரை கிராமப் பணியாளர்களாக நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்துவோம்.

    மத்திய அரசு திட்டத்தின் கீழ் தரம் உயர்த்தி அமைக்கப்படும் சாலைகளைப் பராமரிப்பதற்கும், 13 ஆயிரம் கிலோமீட்டர் தங்க நாற்கரச் சாலைகள் மற்றும் கிழக்கு - மேற்கு, வடக்கு - தெற்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆகியவற்றைப் பராமரிப்பதற்கும் 10-ஆம் வகுப்பு வரை படித்த இளைஞர்கள் 10 லட்சம் பேர் சாலைப் பணியாளர்களாக நியமிக்கப்பட வேண்டுமென வலியுறுத்துவோம்.

    சேது திட்டம், கச்சத்தீவு: சேது சமுத்திரத் திட்டப் பணிகளை மீண்டும் தொடங்கி நிறைவேற்றிட இணக்கமான சூழ்நிலையை உருவாக்கி, தென்னக வளர்ச்சிக்குத் துணை புரிய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவோம்.

    கச்சத்தீவில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமை இல்லை என்று தமிழக மீனவர்களின் மரபுரிமைக்கு மாறாக மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்திருப்பதை திரும்பப் பெறச் செய்து, கச்சத்தீவினை மீட்கும் முயற்சியில் திமுக தீவிரமாக ஈடுபடும்.

    இலங்கைத் தமிழர்களின் விருப்பத்துக்கு ஏற்ப நிரந்தரமான அரசியல் தீர்வு அமைய வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையே ஐ.நா. மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

    மீனவர்களைக் காக்க அமைச்சகம்: அயல்நாட்டு அச்சுறுத்தல்களில் இருந்து இந்திய, தமிழக மீனவர்களின் நலன் பாதுகாக்கப்படும் வகையில் மத்திய அரசில் ஒரு தனி அமைச்சகத்தை உருவாக்கிட மத்திய அரசை திமுக வலியுறுத்தும்.

    பழங்குடியினர் பட்டியலில் மீனவர் சமுதாயத்தை இணைப்பதற்கும்  பழங்குடியினருக்குள்ள அனைத்து சலுகைகளும் மீனவர்களுக்குக் கிடைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்தியாவில் உள்ள அனைத்து கடல் மற்றும் உள்நாட்டு மீனவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் தேசிய மீனவர் நல ஆணையம் ஒன்றை உருவாக்க உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    ஆழ்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களைக் காப்பாற்றிட இந்தியக் கப்பல் படை மற்றும் கடலோரப் பாதுகாப்பு படையுடன் மீனவர்களுக்கு தங்கு தடையற்ற தொலைத் தொடர்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதுடன், ஆங்காங்கே ஹெலிகாப்டர் தளங்களை அமைத்து அவற்றின் மூலம் மீனவர்களின் உயிரிழப்புகளைத் தவிர்க்க திமுக வலியுறுத்தும்.

    மின்வழித் தடம்: மாநிலங்களில் மத்திய அரசின் நிறுவனங்கள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை அந்தந்த மாநிலங்களின் பயன்பாட்டுக்கே வழங்குவதற்கும், மிகை மின்சாரம் உற்பத்தியாகும் நிலையில் மட்டுமே மற்ற மாநிலங்களுக்கு வழங்கவும் வலியுறுத்துவோம்.

    ஒரு மாநிலத்தில் உள்ள மிகை மின்சாரத்தை மின் தட்டுப்பாடு உள்ள மற்றொரு மாநிலத்துக்கு எளிதில் கொண்டு செல்வதற்கு ஏதுவாக இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களையும் இணைத்திடும் வகையில் மின்வழித் தடங்கள் உருவாக்கப்படுவதற்கும் மத்திய அரசை வலியுறுத்துவோம்.

    பொருளாதாரக் கொள்கை: கடந்த சில ஆண்டுகளாக பணவீக்கம் அதிகரிக்கும் போக்கு நிலவுகிறது. அதுபோல வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அரசின் கொள்கை முடிவுகளில், அரசு சாராத நிறுவனங்களின் தலையீடு அதிகரித்து, அதன் விளைவாக முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சம்தான் இதற்கு அடிப்படைக் காரணம் என்று திமுக கருதுகிறது.

    எனவே அரசின் கொள்கை முடிவுகளில், அரசு சாராத நிறுவனங்களின் தலையீட்டைக் கட்டுப்படுத்த உரிய முயற்சியை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

    புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி: புதுவை நீண்ட நெடுங்காலமாகவே யூனியன் பிரதேசமாக இருந்து வருவதால், அதற்கு முழு மாநிலத் தகுதி தரப்பட வேண்டுமென்ற நம்முடைய கோரிக்கை வெற்றிபெற மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்.

    குலசேகரப்பட்டினத்தில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க திமுக வலியுறுத்தும்.

    திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் இந்திய வான்வெளி திரவ உந்துவிசை தொழில் நுட்ப மையம் அமைத்திட மத்திய அரசை திமுக வலியுறுத்தும்.

    குளச்சல் துறைமுகத்தை நவீன வசதிகள் கொண்ட பன்னாட்டுத் துறைமுகமாக மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    விவசாயிகளுக்கு சலுகை: விவசாயிகளுக்கு நெல் அறுவடை இயந்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படும். பாம்பன் பகுதியில் புதிய மேம்பாலம் கட்டப்படும்.

    வீடற்றவர்களாக சாலைகளில் உறங்கும் மக்களுக்கு உதவிடும் வகையில் காப்பிடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    தூக்குத் தண்டனை அடியோடு ரத்து செய்யப்படும்.

    சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட மாட்டாது உள்ளிட்டவையும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai