இடதுசாரிகள் வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்: ஜி. ராமகிருஷ்ணன்
Published on : 13th March 2014 04:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

இடதுசாரி கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன்.
திருவாரூருக்கு புதன்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் இணைந்து மக்களவைத் தேர்தலை சந்திக்கும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் திருச்சியில் மார்ச் 15-ம் தேதியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் கூட்டம் சென்னையில் மார்ச் 16-ம் தேதியும் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டங்களில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது, வேட்பாளர்கள் யார்?, போட்டியிடாத இடங்களில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்படும். தொடர்ந்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தேர்தல் பணியை தொடங்குவோம்.
மதவாத எதிர்ப்பு, தாராளமய பொருளதார கொள்கை எதிர்ப்பு, ஊழல் எதிர்ப்பு ஆகியவற்றுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறோம். இதை முன்னிறுத்தியே தேர்தலில் போட்டியிடுகிறோம்.
கடந்த 1999 முதல் 2004 வரையிலான பாஜக ஆட்சியிலும், 2004 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சியிலும் திமுக அங்கம் வகித்தது.
அப்போது, தாராளமயமான பொருளாதார கொள்கைக்கு திமுக ஆதரவு அளித்தது. எனவே, திமுகவுடன் கூட்டணி கிடையாது என்பதில் இடதுசாரிகள் உறுதியாக இருக்கிறோம்.
மதவாதம், ஊழலுக்கு எதிராக 3-வது அணியை உருவாக்க வேண்டும் என்பதுதான் இடதுசாரிகளின் விருப்பம்.
மத்தியில் காங்கிரஸ், பாஜக இல்லாத மாற்று அரசு உருவாக வேண்டும் என்பதே இடதுசாரிகளின் நோக்கம் என்றார் ராமகிருஷ்ணன்.
பேட்டியின்போது, கட்சியின் மாவட்டச்
செயலர் ஐ.வி. நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரெங்கசாமி, கலியபெருமாள்,
கந்தசாமி, நகரச் செயலர் ராமசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.