Enable Javscript for better performance
குடும்ப நல நீதிமன்றத்துக்கு இனி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை- Dinamani

சுடச்சுட

    

    குடும்ப நல நீதிமன்றத்துக்கு இனி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை

    By dn  |   Published on : 13th March 2014 01:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடும்ப நல நீதிமன்றங்கள் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படாது என உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.

     சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் 4 குடும்ப நல நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நீதிமன்றங்களுக்கு அதிகமான வழக்குகள் வருவதால் சனி, ஞாயிறு உள்பட வாரத்தின் அனைத்து நாள்களும் செயல்படும் நடைமுறை 2010-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து இந்த நீதிமன்றங்களில் நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் வாரத்தின் 7 நாள்களும் பணியாற்றி வருகின்றனர்.

    வார விடுமுறையில்லாமல் செயல்படும் இந்த விடுமுறை நீதிமன்றத்தை சில ஆண்டுகளாக வழக்குரைஞர்கள் எதிர்த்து வருகின்றனர். குறிப்பாக வார விடுமுறையில்லாமல் தொடர்ந்து பணியாற்றுவதை பெண் வழக்குரைஞர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கு ஒன்றும் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில் குடும்ப நல நீதிமன்றம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் விடுத்துள்ள அறிவிப்பு:

    சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பிரதான குடும்ப நல நீதிமன்றம், முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றம், 2-ஆவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றம், 3-ஆவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றம் ஆகிய 4 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. வாரத்தின் 7 நாள்கள் செயல்பட்டு வரும் இவை இனி திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை 6 நாள்கள் மட்டுமே செயல்படும். இந்த நடைமுறை மார்ச் 11-ஆம் தேதி முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது. இதன்படி வரும் காலங்களில் குடும்ப நல நீதிமன்றங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பினை வழக்குரைஞர்கள் வரவேற்றுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai