சுடச்சுட

    

    கோயிலில் கட்டண முறைகேடு: நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    By dn  |   Published on : 13th March 2014 04:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    highcourt

    கடலூரில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயிலில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர். கண்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு மீது இந்த உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது.

    இதுகுறித்த விவரம்:

    கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகா, கொஞ்சிகுப்பம் கிராமத்தில் அய்யனாரப்பன் கோயில் உள்ளது. இக் கோயில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமானது.

    மது பழக்கத்துக்கு ஆளாகியிருக்கும் நபர்கள் அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட, ஒரு சில சடங்குகள் இந்த கோயிலில் செய்யப்படுகின்றன. இதனால் இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கனக்கானோர் வந்து செல்கின்றனர்.

    சடங்குகள் மேற்கொள்ள பக்தர்களிடம் மூன்று விதமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அதற்கு ரசீது எதுவும் வழங்கப்படுவதில்லை.

    இதன் மூலம் நாளொன்றுக்கு ரூ. 25 ஆயிரத்துக்கும் மேல் கட்டணத் தொகை வசூலாகிறது. ஆனால், கோயில் வசூலை கோயில் நிர்வாக அறங்காவலர் இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகக் கணக்கில் செலுத்துவதில்லை.

    இதுபோன்று பல்வேறு முறைகேடுகள் கோயிலில் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர், இந்து சமய அறநிலையத் துறை மாவட்ட உதவி ஆணையர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் புகார் அளித்தும் பலனில்லை என தனது மனுவில் கண்ணன் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ் கே. அக்னி ஹோத்ரி, நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

    மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் புகார் தொடர்பாக இந்து சமய அறநிலயைத் துறை ஆணையர் உரிய ஆய்வு மேற்கொண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவிட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai