சுடச்சுட

    

    தமிழக மீனவர்கள் விடுவிப்பில் தாமதம்: இலங்கை மீனவர்களுடனான பேச்சுவார்த்தை தள்ளிவைப்பு

    By dn  |   Published on : 13th March 2014 05:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையே கொழும்பில் வியாழக்கிழமை (மார்ச் 13) நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

    தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை கொழும்பு நகரில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. பேச்சுக்கு முன்பாக, இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் கடிதம் எழுதினார்.

    ஆனால் இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களை விடுவிக்க அந்நாட்டு அரசு தொடர்ந்து தாமதம் காட்டி வந்தது. இதையடுத்து மீனவர்களை விடுவிக்க  நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய வெளியுறவுத் துறை இணைச் செயலாளர் சுசித்ரா துரைக்கு, தமிழக மீன்வளத் துறை செயலாளர் விஜயகுமார், செவ்வாய்க்கிழமை இரவு கடிதம் எழுதினார்.

    முதல்வர் ஜெயலலிதாவின் வேண்டுகோள் மற்றும் அரசுத் துறை செயலாளரின் கடிதம் ஆகியவற்றால், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 116 தமிழக மீனவர்களை புதன்கிழமை காலை விடுவிக்க அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும், 60-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை சிறைகளிலேயே உள்ளனர். இதன் மூலம், பேச்சுவார்த்தைக்கு முன்பாக அனைத்து மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் வேண்டுகோளை இலங்கை முழுவதுமாக ஏற்கவில்லை. இலங்கை அரசின் நடவடிக்கையால் தமிழக மற்றும் இலங்கை நாட்டு மீனவர்களுக்கு இடையே கொழும்புவில் வியாழக்கிழமை (மார்ச் 13) நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை தள்ளிவைக்கப்பட்டதாக மீனவ சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து, அரசுத் துறை உயரதிகாரிகளிடம் கேட்டபோது, இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்பதே மாநில அரசின் முதல் கோரிக்கை.

    இதன் பின்பே, பேச்சுவார்த்தையை சுமுகமாக நடத்த முடியும். தமிழகத்தின் நிலை குறித்து மத்திய அரசுக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பப்பட்ட கடிதத்தில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனக் கூறினர். பேச்சுவார்த்தை தள்ளிவைப்பு போன்ற விவரங்களைத் தெரிவிக்க அவர்கள் மறுத்து விட்டனர்.

    கொழும்பில் வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற வேண்டுமென்றால், தமிழக மீனவர் சங்கங்களைச் சேர்ந்த 13 பேரும் புதன்கிழமையே அங்கு சென்றிருக்க வேண்டும். அவர்களுடைய பாஸ்போர்ட்டுகளை மட்டும் தமிழக அரசுத் துறை அதிகாரிகள் ஏற்கெனவே பெற்றுச் சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் பயணிக்கும் தேதி இறுதி செய்யப்படவில்லை. இதனால், அவர்களுடைய பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக மீன்வளத் துறை இயக்குநரக அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai