சுடச்சுட

    

    புதுவை சட்டப்பேரவையில் ரூ.2,550 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல்

    By dn  |   Published on : 13th March 2014 04:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    12pyp3

    புதுச்சேரி சட்டப்பேரவையில், ரூ.2,550 கோடிக்கான ஆறு மாத இடைக்கால பட்ஜெட்டை, முதல்வர் என்.ரங்கசாமி புதன்கிழமை தாக்கல் செய்தார்.

    புதுச்சேரியில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.  நடப்பாண்டு நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் 6 மாத செலவினங்களுக்கு ஒப்புதல் பெற சட்டப்பேரவையைக் கூட்ட அரசு முடிவெடுத்தது. அதன்படி புதுச்சேரி 13 ஆவது சட்டப்பேரவையின் ஆறாவது கூட்டத் தொடர் புதன்கிழமை காலை 10 மணிக்குக் கூடியது. அவை கூடியவுடன் பேரவைத் தலைவர் வ.சபாபதி, இரங்கல் தீர்மானத்தை வாசிக்க முயன்றார்.

    அப்போது எதிர்கட்சித்தலைவர் வி.வைத்திலிங்கம் குறுக்கிட்டுப் பேசுகையில், கடந்த கூட்டத் தொடரின்போது மக்கள் பிரச்னைகள் குறித்து பேச வாய்ப்பு தர வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரினோம். அப்போது பேரவைத் தலைவர், ஜனவரி மாதம் பேரவை கூட்டப்படும் போது முழுமையாக நேரம் ஒதுக்கித் தரப்படும் என தெரிவித்தார்.

    ஆனால் தற்போது தேர்தல் விதியை காரணம் காட்டி இடைக்கால பட்ஜெட்டை ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்ற முடிவெடுத்துள்ளீர்கள். கடந்த கூட்டத்தொடரில் அளித்த வாக்குறுதி என்னவாயிற்று என்றார்.

    இதற்கு பதிலளித்த பேரவைத் தலைவர் சபாபதி, இரங்கல் குறிப்பு வாசிக்கும்போது குறுக்கிடுவது உங்களுக்குத்தான் மரியாதைக் குறைவை ஏற்படுத்தும். இரங்கல் குறிப்புக்கு பின் உங்கள் கருத்தை கூறுங்கள் எனத் தெரிவித்தார்.

    காங்கிரஸ் வெளிநடப்பு: இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்கட்சித்தலைவர் வைத்திலிங்கம், இரங்கல் குறிப்பையும் கண்டிக்கிறோம், சபாநாயகரையும் கண்டிக்கிறோம் எனக்கூறி வெளிநடப்பு செய்தார். அவருடன் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், தேனீ ஜெயக்குமார், லட்சுமிநாராயணன், திருமுருகன் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து பேரவைத் தலைவர் சபாபதி, மறைந்த முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவர் ராஜசேகர உடையார், முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ வீரம்மாள் ஆகியோரது மறைவுக்கு இரங்கல் தீர்மானத்தை வாசித்தார்.

    அதன்பின் அனைத்து உறுப்பினர்களும் 2 நிமிடம் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர்.

    இதைத்தொடர்ந்து ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை 6 மாத செலவினமான ரூ.2,550 கோடிக்கு ஒப்புதல் பெற வாக்கெடுப்பு நடத்தினார். இதில் பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவித்ததால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனால் அரசின் 6 மாத  செலவினங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. பின்னர் பேரவை காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் சபாபதி அறிவித்தார்.

    35 நிமிடங்களில் நிறைவு: புதுச்சேரி சட்டப்பேரவையின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும் நிகழ்வு 35 நிமிடங்களில் முடிந்தது. காலை 10 மணிக்குத் தொடங்கிய பேரவை 10.35 மணிக்கு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 

    ஆளும்கட்சியான என்.ஆர். காங்கிரஸ், அதிமுக, திமுகவில் அனைத்து உறுப்பினர்களும்  அவை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். காங்கிரஸ் உறுப்பினர் வல்சராஜ் மட்டும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கூட்டம் முடிவதற்கு சில நிமிடத்துக்கு முன்பு காங்கிரஸ் உறுப்பினர் நமச்சிவாயம் பேரவைக்கு வந்து நிகழ்வுகளில் பங்கேற்றார். பேரவைக் கூட்டத்தையொட்டி வளாகம் முழுவதும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai