சுடச்சுட

    

    மக்களவைத் தேர்தல் பாதுகாப்புப் பணிகள்: மத்திய ரிசர்வ் போலீஸார் தமிழகம் வருகை

    By dn  |   Published on : 13th March 2014 04:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    praveenkumar

    மக்களவைத் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட, மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த போலீஸார் அடங்கிய 32 கம்பெனி படையினர் வரும் 23-ஆம் தேதிக்குள் தமிழகம் வரவுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.

    மேலும், சமூக ஊடகங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்றும், அனுமதி பெறாமல் பிரசாரம் செய்ததற்காக அதிமுகவுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டதாகவும் பிரவீண்குமார் தெரிவித்தார்.

     மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை  அளித்த பேட்டி:   

    தேர்தல் தொடர்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்தும் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்துக்கு மட்டும் நாளொன்றுக்கு 300 புகார்கள் வீதம் வருகின்றன. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை, பொது இடங்களில் பேனர்கள், போஸ்டர்கள் அகற்றப்படவில்லை என்பன போன்றவை புகார்களாக தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

    அதிமுகவுக்கு கடிதம்: இணையதளம் உள்பட சமூக ஊடகங்களில் தேர்தல் பிரசாரம் செய்வது தொடர்பாக ஏற்கெனவே விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதிமுக இணையதளத்தில் அந்தக் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப்பட்டு வருவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டன. அது தாடர்பாக, அந்தக் கட்சியிடம் விளக்கம் கேட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்துக்கான விளக்கத்தை அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்தவர்கள் திங்கள்கிழமை நேரில் வந்து அளித்தனர். மேலும், பிரசாரம் தொடர்பான சி.டி. உள்ளிட்டவற்றையும் கொடுத்தனர்.

    இணையதளம் போன்ற சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்யும் போது தேர்தல் ஆணையத்தின் ஊடகப் பிரிவிடம் முன்அனுமதி பெற வேண்டும். இந்தப் பிரிவு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்திலும், மாவட்டங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகங்களிலும் செயல்பட்டு வருகின்றன.

    ஆவணங்கள் அவசியம்: மக்களவைத் தேர்தலை ஒட்டி, வாகனச் சோதனைகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. உரிய ஆவணங்களுடன் எடுத்துச் செல்லப்படும் ரொக்கம் மற்றும் ஆபரணப் பொருள்கள் பறிமுதல் செய்யப்படாது. எனவே, தகுந்த ஆவணங்களுடன் அவற்றை எடுத்துச் செல்வதில் பொது மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.

    வாகனங்களில் அதிகளவு பணம் எடுத்துச் செல்லப்படுவதைத் தடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பறக்கும் படையைச் சேர்ந்தவர்கள் இதுவரை ரூ.1.05 கோடியும், தொகுதிகளில் உள்ள கண்காணிப்புக் குழுவினர் ரூ.1.02 கோடியையும் பறிமுதல் செய்துள்ளனர். அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ரூ.50 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொகையை எடுத்துச் செல்லக் கூடாது.

    எம்.எல்.ஏ. அலுவலகங்கள் மூடல்: அரசு சார்பான கட்டடங்கள் என்பதால், எம்.எல்.ஏ.க்களின் அலுவலகங்களை மூட உத்தரவிட்டுள்ளோம். அதே சமயம் மேயர் உள்பட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் தங்களது அலுவலகங்களில் வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம். ஆனால், ஆலோசனைக் கூட்டங்களையோ, மற்றவர்களைச் சந்திப்பதையோ தவிர்க்க வேண்டும். மக்களையோ, கட்சியினரையோ சந்திப்பது என்பது அரசியல் தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கு இணையானதாகும்.

    சுய உதவிக் குழுக்கள் மூலமாக பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் ஏதும் வரவில்லை. அந்தக் குழுக்களின் செயல்பாடுகள் தொடர்பாக, தினசரி அறிக்கை அளிக்க மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், வங்கிக் கணக்குகளில் ஒரு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக பணப் பரிமாற்றம் செய்யப்படுவதைக் கண்காணித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் தகவல்களை அளிக்கும்படி வங்கிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    கருத்துக் கணிப்புகள்: தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் -24- ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்குப் பதிவுக்கு 48 மணிநேரத்துக்கு முன்பாக, அதாவது ஏப்ரல் 22 ஆம் தேதி மாலை 5 மணி வரை கருத்துக் கணிப்புகளை வெளியிடலாம். அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்களுக்கான பேனர்களை கூட்டம் நடைபெறும் 12 மணி நேரத்துக்கு முன்பாக வைத்து, கூட்டம் முடிந்த 5 மணிநேரத்துக்குள்ளாக அவற்றை அகற்ற வேண்டும்.

    32 கம்பெனி படையினர்: வேட்பாளர்களின் செலவுக் கணக்குகள் உள்பட தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள செலவின பார்வையாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களுக்கு உதவிடவும், பாதுகாப்பு அளித்திடவும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் பிற மாநிலங்களின் போலீஸார் அடங்கிய 32 கம்பெனி படையினர் (ஒரு கம்பெனிக்கு 100 போலீஸார்) வரும் 23- ஆம் தேதிக்குள் தமிழகம் வரவுள்ளனர்.

    தேர்தல் பணியில் தமிழகத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 3 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    தேர்தல் அறிக்கைகள்: மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் சார்பில் தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த அறிக்கைகளில் தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறி மக்களை அதிகம் கவரும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளதா அறிந்து கொள்ளும் வகையில், தேர்தல் அறிக்கைகள் ஆணையத்துக்கு அனுப்பப்படுவது வழக்கம். அதன்படி, அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அந்தக் கட்சி அனுப்பியுள்ளது. பிற கட்சிகளும் அனுப்பும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார் பிரவீண்குமார்.

    "வாக்காளர்களே புறக்கணிக்க வேண்டும்'

    அதிகமாக சொத்து சேர்த்தோர், குற்றப் பின்னணி உடைய வேட்பாளர்களை வாக்காளர்களே புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது குறித்து, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அவர் அளித்த பேட்டி:

    ஒரு குற்ற வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு அந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே ஒரு வேட்பாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியை இழப்பார். சில வழக்குகளில் குறிப்பாக வரதட்சணை, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வன்கொடுமைச் சட்டம் ஆகியவற்றில் அபராதம் விதிக்கப்பட்டிருந்தாலே தேர்தலில் போட்டியிட முடியாது.

    மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு அதிகமான சிறைத் தண்டனை பெற்றாலும் தேர்தலில் போட்டியிடும் தகுதியை வேட்பாளர்கள் இழப்பார்கள். ஒரு வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டால் மட்டுமே சம்பந்தப்பட்ட நபரை தகுதி நீக்கம் செய்ய முடியாது.

    எனவே அதிகமாக சொத்து சேர்த்தோர், குற்றப் பின்னணி  உடைய வேட்பாளர்கள் போன்ற அம்சங்களை வாக்குப்பதிவின் போது வாக்காளர்களே அறிந்து கொண்டு தங்களது வாக்குகளைச் செலுத்த வேண்டும் என்று பிரவீண்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

     

    சுவர்களில் விளம்பரங்கள்: 12 ஆயிரம் வழக்குகள் பதிவு

    தேர்தல் நடத்தை விதிகளை மீறி, சுவர்களில் விளம்பரங்கள் எழுதியது தொடர்பாக இதுவரை 12 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் அறிவித்தார்.

    இது குறித்து, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அவர் அளித்த பேட்டி:

    மக்களவைத் தேர்தலை ஒட்டி, அரசு சுவர்களில் விளம்பரங்கள் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசு சுவர்களில் எழுதப்பட்டுள்ள விளம்பரங்களை அழிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுவர் விளம்பரங்களை அகற்றுவதற்கான கால அவகாசம் கடந்த 7-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

    இதையடுத்து, அரசு சுவர்களில் விளம்பரங்கள் செய்ததாக கடந்த 7-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரையிலான காலத்தில் மட்டும் 8 ஆயிரத்து 345 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    மேலும், தனியார் சுவர்களில் அனுமதியின்றி சுவர் விளம்பரங்கள் செய்ததாக, 4 ஆயிரத்து 602 வழக்குகள் பதிவாகியுள்ளன. கட்சி வாரியாக விளம்பரங்கள் செய்தது தொடர்பான விவரங்கள் தனியாக இல்லை என்று பிரவீண்குமார் தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai