சுடச்சுட

    

    8 மணி நேர பணி நிர்ணயம் கோரி பயிற்சி மருத்துவர்கள் வழக்கு: அரசுக்கு நோட்டீஸ்

    By dn  |   Published on : 13th March 2014 04:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசு பயிற்சி மருத்துவருக்கு 8 மணி நேரம் மட்டும் பணி நிர்ணயம் செய்யக் கோரி தொடர்ந்த வழக்கில் 3 வாரத்தில் பதிலளிக்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழ்நாடு பயிற்சி மருத்துவர்கள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் கூட்டமைப்பின் சார்பில் அதன் செயலர் ஜெ.பிரவீண் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் விவரம்:

     மருத்துவம் படித்து முடித்த அனைத்து மாணவர்களும் ஒரு ஆண்டு பயிற்சி மருத்துவராக ஏதேனும் ஒரு மருத்துவமனையில் பயிற்சி பெற வேண்டும் என்ற விதி உள்ளது. அதன்படி மருத்துவ பயிற்சியினை மேற்கொள்ளும் மாணவர்கள், பயிற்சி பெறும் இடத்தில் மருத்துவமனை நிர்வாகத்தினரால் மிகக் கடுமையாக நடத்தப்படுகின்றனர்.

     இந்திய மருத்துவக் கவுன்சிலின் (எம்.சி.ஐ) பரிந்துரையின்படி உருவாக்கப்பட்ட சட்டத்தில் பயிற்சி மருத்துவர்கள் 240 வேலை நாள்கள் பயிற்சிக்கு வரவேண்டும். அதில் 85 சதவீதம் வருகைப் பதிவு இருந்தால் போதும் என தெரிவிக்கிறது. ஆனால் பயிற்சி மருத்துவர்கள் தொடர்ந்து 36 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் எனவும் வார விடுமுறை இல்லாமல், அரசு விடுமுறை நாள்களிலும் கூட, சில சமயம் 365 நாள்களும் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர். இது மனித உரிமை மீறல் மற்றும் பல்கலைக்கழக சட்ட விதிமுறைகளுக்கு எதிரானதாகும்.

     இந்த அதீத வேலைப் பளுவினால் பயிற்சி மருத்துவர்கள் கடுமையான மனம் மற்றும் உடல்நலப் பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். இதன் காரணமாக அவர்களுடைய கற்கும் திறன் பாதிக்கப்பட்டு, பயிற்சியும் கேள்விக்குறியாகியுள்ளது.

     இது குறித்து எங்கள் அமைப்பின் சார்பில் அரசுக்கும் பல்கலைக்கழகத்துக்கும் பல முறை எடுத்துக் கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

      ஆதலால் பயிற்சி மருத்துவர்களுக்கு 8 மணி நேர பணி நிர்ணயம், வார விடுமுறை மற்றும் அரசு விடுமுறையை வழங்க, அரசு மற்றும் மருத்துவமனை நிர்வாகங்களுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை  விசாரித்த நீதிபதிகள் இது குறித்து அரசு 3 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai