சுடச்சுட

    

    "அம்மா' என்ற சொல் பொதுவானது; மறைக்கத் தேவையில்லை: நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

    By dn  |   Published on : 14th March 2014 05:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    election commissiom of india

    "அம்மா' என்ற சொல் பொதுவானது என்பதால், அரசியல் கட்சித் தலைவர்களின் படங்கள் இல்லாமல் அந்த வார்த்தை அரசு வளாகங்களிலோ அல்லது அரசுக்குச் சொந்தமான இடங்களிலோ இருந்தால் அதை மறைக்க வேண்டிய அவசியமில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலில் உள்ளன. எனவே அரசு ஸ்மால் பஸ், குடிநீர் பாட்டில்களில் உள்ள இரட்டை இலை மற்றும் முதல்வர் புகைப்படம் போன்றவற்றை அகற்ற உத்தரவிட வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன்பு கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் மூத்த வழக்குரைஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, அரசு குடிநீர் பாட்டில்கள் மற்றும் அரசு உடைமைகளில் உள்ள முதல்வர் படம் ஆகியன ஏற்கனவே மறைக்கப்பட்டு விட்டன.

    அரசு ஸ்மால் பஸ்களில் வரையப்பட்டுள்ள ஓவியம் இரட்டை இலையா, இல்லையா என்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக 2 நாள்களுக்குள் பதில் அளிக்கப்படும் என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணை மார்ச் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, இந்த வழக்கின் விசாரணை வியாழக்கிழமை மீண்டும் நடைபெற்றது. அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

    அம்மா சொல் பொதுவானது: "அம்மா' என்ற சொல் பொதுவானதாகும். அரசு வளாகம், சுவர்கள் போன்றவற்றில் கட்சித் தலைவர்களின் புகைப்படத்துடன் அம்மா என்ற சொல் இடம்பெற்றால் மட்டுமே ஆட்சேபிக்க வேண்டும். புகைப்படம் இடம்பெறவில்லையெனில் அவற்றை ஆட்சேபிக்க வேண்டிய அவசியமில்லை.

    எம்.ஜி.ஆர். நினைவிட முகப்பு: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் முன்னரே எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் உள்ள முகப்பு கட்டப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட வேண்டிய அவசியமில்லை.

    ஸ்மால் பஸ்: அரசு ஸ்மால் பஸ்களில் இடம்பெற்ற இரட்டை இலை ஓவியம் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தைப் போன்று உள்ளது. அதிமுகவின் நடமாடும் பிரசார விளம்பரங்களாக அவை இடம்பெறாத வகையில் அவற்றை மறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

    மிக்ஸி, கிரைண்டர்: கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது, இலவச கலர் டி.வி. வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டது. அதே போல் மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் திட்டமும் நிறுத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    அரசு ஸ்மால் பஸ்களில் இடம்பெற்ற இரட்டை இலை அதிமுகவின் சின்னம் போன்று உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்ததற்கு அட்வகேட் ஜெனரல் எல்.சோமயாஜி எதிர்ப்பு தெரிவித்தார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 17}க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai