Enable Javscript for better performance
கச்சத்தீவு திருவிழாவுக்கு 3432 பேர் இன்று பயணம்: ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல்- Dinamani

சுடச்சுட

    

    கச்சத்தீவு திருவிழாவுக்கு 3432 பேர் இன்று பயணம்: ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல்

    By dn  |   Published on : 14th March 2014 11:51 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sailendra

    கச்சத்தீவில் சனிக்கிழமை நடைபெறும் புனித அந்தோணியார் கோயில் திருவிழாவுக்கு ராமேசுவரத்திலிருந்து 3432 பக்தர்கள் செல்ல இருப்பதாக கடலோரக் காவல் குழும ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு ராமநாதபுரத்தில் தெரிவித்தார்.

    கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் கோயில் திருவிழா மார்ச் 15,16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இத் திருவிழா தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வுசெய்ய வந்திருந்த அவர் மேலும் கூறியது:

    கச்சத் தீவு திருவிழாவுக்கு 2763 ஆண்கள், 535 பெண்கள், 80 ஆண் குழந்தைகள் மற்றும் 54 பெண் குழந்தைகள் உள்பட மொத்தம் 3432 பக்தர்கள் சனிக்கிழமை காலையில்

    ராமேசுவரத்திலிருந்து செல்கின்றனர். இவர்களை 6 கடலோரக் காவல் குழும படகுகள் பாதுகாப்பாக அழைத்துச் சென்று இந்திய கடல் எல்லையில் கொண்டு போய் விட்டு விடுவர். பின்னர் திரும்பும் போது அதே இந்திய எல்லையில் இருந்து பாதுகாப்பாக அழைத்து வருவர்.

    பாதுகாப்புப் பணிக்கென 20 பேர் கொண்ட தனிப் படையும் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் படகுகளில் செல்லும் அனைவருக்கும் லைப் ஜாக்கெட் வழங்கப்படும். அதை அவர்கள் அணிந்து கொண்டுதான் பயணிக்க வேண்டும்.

    ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் கடலில் நீராடும் பக்தர்கள் சிலர் தண்ணீரில் மூழ்கி விட்டால், அவர்களை உடனடியாக எப்படி காப்பாற்றுவது, எவ்வாறு முதலுதவிகள் செய்வது என வெள்ளிக்கிழமை கடலோரக் காவல் குழும போலீஸாருக்கு பயிற்சியளிக்கப்பட்டது. இப் பயிற்சியைத் தவிர, சறுக்கு நீச்சல், டைவிங்ஸ், கடலில் துப்பாக்கியால் சுடுவது போன்ற பயிற்சிகளும் கடலோரக் காவல் குழும போலீஸாருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தை உள்ளடக்கிய குருசடைத் தீவில் சனி, ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15,16) உள்ளிட்ட இரு நாள்களிலும் தூத்துக்குடி சுகந்தி தேவதாசன் அறக்கட்டளை மூலம் கடலோரக் காவல் குழும போலீஸாருக்கு ஸ்கூபா டைவிங் பயிற்சியும் கற்றுத் தரப்பட இருப்பதாகவும் சைலேந்திரபாபு தெரிவித்தார்.

    பேட்டியின்போது, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார், எஸ்.பி. மயில்வாகனன், கடலோரக் காவல் குழும எஸ்.பி.க்கள் வனிதா, மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai