சுடச்சுட

    
    stalin

    மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி வியூகத்தை கருணாநிதிதான் வகுத்தார் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    மத்திய சென்னை தொகுதி திமுக வேட்பாளரான தயாநிதி மாறனை ஆதரித்து ராயப்பேட்டையில் வியாழக்கிழமை செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் ஸ்டாலின் பேசியது:

    மத்திய சென்னை திமுகவின் கோட்டை. இந்த தொகுதியில் இருந்து 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் தயாநிதிமாறன். மத்திய அமைச்சராக இருந்து, பல்வேறு திட்டங்களை நிறைவேற்றித் தந்துள்ளார்.

    திமுகவின் தேர்தல் அறிக்கையில் அனைத்துத் தரப்பு மக்களையும் கவரும் வகையில் 100 தலைப்புகளில் கருணாநிதி தயாரித்து தந்தார்.

    ஆனால், அதிமுக தேர்தல் அறிக்கை, திமுகவை வசைபாடும் அறிக்கையாகும்.

    தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாக எந்த ஒரு நாட்டிலும் தேர்தல் பிரசாரத்தை யாரும் இதுவரை தொடங்கியது இல்லை.

    ஆனால் ஜெயலலிதா முன்கூட்டியே தொடங்கி விட்டார். அவர் தேர்தல் பிரசாரத்தை முன் கூட்டியே தொடங்கியதற்கு முழு காரணம் பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் இருந்து தப்பிக்கத்தான். திமுக ஆட்சியில் 2 மணிநேரம் மின்வெட்டு இருந்தது உண்மை.

    ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டே இருக்காது என்று பிரசாரம் செய்து, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். இப்போது மின்வெட்டு பிரச்னை தீர்ந்துவிட்டதா என்றால், இல்லை.

    சிதம்பரம் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா என் பெயரை உச்சரித்துள்ளார். அது மகிழ்ச்சிதான். அரசு பஸ்களில், எம்.ஜி.ஆர். சமாதியில் இரட்டை இலையை மறைக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்து உள்ளேன்.

    இதற்கு ஜெயலலிதா சைக்கிள், கை போன்ற சின்னங்களும் இருக்கின்றன. அதற்காக கையை வெட்ட முடியுமா? சைக்கிளை ஓட்டாமல் இருக்க முடியுமா என்று புத்திசாலித்தனமாக பேசுகிறார்.

    இரட்டை இலையை வைப்பதில் எனக்கு ஒன்றும் பிரச்னை இல்லை.

    ஆனால் மக்கள் வரிப் பணத்தில் இரட்டை இலை இருக்கக் கூடாது என்றுதான் நாங்கள் கூறுகிறோம்.

    இந்த தேர்தலில் நான் வியூகம் அமைத்து இருப்பதாக தயாநிதி மாறன் குறிப்பிட்டார். அது தவறு. கருணாநிதிதான் வியூகம் வகுத்தார்.

    திமுக பொதுக்குழுவில் கட்சியினர் அறிவித்த பல்வேறு கருத்துகள் அடிப்படையில் யாருடன் கூட்டணி கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவையே கருணாநிதி அறிவித்ததாக ஸ்டாலின் கூறினார்.

    கூட்டத்துக்கு தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமை வகித்தார்.

    கருணாநிதியின் மகன் மு.க. தமிழரசு, முன்னாள் அமைச்சர் ரகுமான்கான், தொகுதி பொறுப்பாளர் சேகர்பாபு உள்பட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai