சுடச்சுட

  
  raja

  2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் தன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் தேர்தல் களத்திலிருந்தே விலகத் தயார் என நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா தெரிவித்தார்.

  நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர், வியாழக்கிழமை மாலை உதகை வந்த ஆ.ராசாவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

  திமுக சார்பில் நீலகிரி மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிட வேண்டுமென்ற திமுக தலைவர் கருணாநிதியின் ஆணையை ஏற்று மீண்டும் வேட்பாளராக போட்டியிடுகிறேன்.

  அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் ரூ. 1 லட்சத்து 76,000 கோடி அரசுக்கு நஷ்டமேற்பட்டதாக இந்திய கணக்குத் துறை அறிக்கை கொடுத்திருந்தது. மக்களவையில் விவாதங்களுக்கு பின், அது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து சிபிஐ என்னை கைது செய்தது. இப்பிரச்னையில் எனது குடும்பத்தினர், நண்பர்கள் வீடுகள் என 33 இடங்களில் சிபிஐ, வருமான வரித் துறை மற்றும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தியதில் ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை.

  அரசு தரப்பு விசாரணையையடுத்து, சிபிஐ அதிகாரிகளும் எதுவும் கிடைக்கவில்லை என அறிக்கை கொடுத்தனர். நிதித் துறை அதிகாரிகளிடமும் அரசின் கொள்கை முடிவின் படியே நடைபெற்றுள்ளதாகவும், தவறு ஏதும் நடக்கவில்லையெனவும் குறிப்பிட்டனர்.

  இந்நிலையில், நாட்டில் தொலைபேசி கட்டணத்தை குறைத்ததும், 30 கோடி மக்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த செல்போன் வசதியை 90 கோடி பேர் பயன்படுத்த வாய்ப்பு கொடுத்ததும், இந்தியாவின் சராசரி தொலைபேசி கட்டணத்தை ரூ. 335லிருந்து ரூ. 100-ஆக குறைத்ததும்தான் நான் செய்த தவறுகளா?

  அதிமுக தேர்தல் அறிக்கையில் தற்போதும் ரூ. 1 லட்சத்து 76,000 கோடி ஊழல் நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மக்களவைக் கூட்டு நடவடிக்கை குழுவின் குற்றப் பத்திரிக்கையில் ரூ. 33,000 கோடிதான் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதற்காக 102 பக்க விளக்கத்தையும் நான் அனுப்பியுள்ளேன்.

  இந்த அறிக்கையை பொதுமக்கள் மத்தியில் எந்த அரசியல் கட்சியாவது விவாதிக்கத் தயாரா என சவால் விடுகிறேன். குற்றம் கண்டுபிடிக்கப்பட்டால் தேர்தல் போட்டியிலிருந்தே விலகிக் கொள்கிறேன். தமிழக மக்களை ஜெயலலிதா ஏமாற்றுகிறார்.

  ஆனால், நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும். நீலகிரி மக்களைப் பொறுத்தமட்டில் ராசா குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்றார் ஆ.ராசா.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai