சுடச்சுட

    

    துரைமுருகன் மகனுக்கு சீட் கொடுக்காதது ஏன்? கருணாநிதி விளக்கம்

    By dn  |   Published on : 14th March 2014 03:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    karunanidh

    திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் மகனுக்கு மக்களவைத் தேர்தலில் சீட் தராதது ஏன் என்பது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி விளக்கம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

    மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்தபோது, இந்த முறை கட்சியின் மூத்த உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்ற முடியவில்லை.

    24 மணி நேரமும் என்னுடன் இருப்பவர் துரைமுருகன். அவருடைய மகனுக்காக வேலூர் தொகுதி வேண்டும் என்று கேட்டிருந்தார். என்னால் மறுக்கவும் முடியவில்லை.

    ஆனால், வேலூர் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தொடர்ந்து போட்டியிட்டு வருகிறது. திமுகவின் அனைத்து சுக துக்கங்களிலும் பங்கெடுத்துக்கொண்டவர் காதர் மொகிதீன்.

    வேலூர் தொகுதியை மீண்டும் அவர் கேட்டபோது, எங்களால் மறுக்க முடியவில்லை. இது தொடர்பாக நான் (கருணாநிதி) முடிவு எடுக்க பட்ட பாட்டினை நானே அறிவேன். 1977-இல் மக்களவைத் தேர்தலுக்கான 24 வேட்பாளர்களையும் அறிவித்து விட்டேன். மத்திய சென்னையில் முரசொலிமாறன் பெயர் படிக்கப்பட்டது. திமுகவினர் போஸ்டர்கள் அடித்து, தேர்தலை பணிகளைத் தொடங்கிவிட்டனர். அதன் பிறகு, ஜனதா கட்சியின் சார்பில் நீலம் சஞ்சீவ ரெட்டி என்னைச் சந்தித்துப் பேசினார். தேர்தல் உடன்பாடு எட்டப்பட்டது. அப்போது மத்திய சென்னை தொகுதியைக் கேட்டனர். பொதுச் செயலாளராக இருந்த நெடுஞ்செழியன், முரசொலி மாறனை தனியாக அழைத்து, மத்திய சென்னை தொகுதியை விட்டுக் கொடுக்க முன்வராதே என்றுகூட கூறினார்.

    ஆனால் முரசொலி மாறன் தன்னுடைய பிரச்னையால் தொகுதி உடன்பாடு ஏற்படாமல் போய்விடக்கூடாது என்பதற்காக ஜனதா கட்சியின் பா.ராமச்சந்திரனுக்கு மத்திய சென்னையை விட்டுக் கொடுத்ததுடன், திமுகவினரை ஒத்துழைக்கும்படி அறிக்கையும் விடுத்தார்.

    இந்தச் சம்பவம்தான் தற்போது நினைவுக்கு வருகிறது. தஞ்சாவூர் தொகுதிக்கு டி.ஆர்.பாலு, பழனிமாணிக்கம், அழகுதிருநாவுக்கரசு போன்றோர் முயற்சித்தனர்.

    இதில் டி.ஆர்.பாலுவைத் தேர்ந்தெடுத்தோம். மற்றவர்களை எப்படிச் சமாதானம் செய்வது என்று நினைத்திருந்தோம்.

    இந்த நிலையில் டி.ஆர்.பாலுவும் பழனிமாணிக்கமும் தஞ்சையில் கட்டிப்பிடித்து சால்வை அணிவித்தபோது எனக்கு மகிழ்ச்சியும் துள்ளலும் ஏற்பட்டது.

    இதுபோல சுப.தங்கவேலன், பொங்கலூர் பழனிச்சாமி, ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு போன்றோர் அவரவர் மகன்களுக்கும், கு.பிச்சாண்டி அவருடைய சகோதரருக்கும் சீட் கேட்டனர். ஆனால் தர முடியவில்லை.

    மிகுந்த கவனத்தோடு ஒவ்வொரு தொகுதியாக அலசி ஆராய்ந்து வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளோம்.

    அவர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டிய கடமை திமுகவினருக்கு இருக்கிறது. இந்த முறை வாய்ப்பு கிடைக்காவிட்டால், அடுத்த முறை நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு திமுகவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai