Enable Javscript for better performance
தேர்தல் சிறப்பு பறக்கும் படை சோதனை: ரூ.1.60 கோடி, 4 கிலோ தங்கம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    தேர்தல் சிறப்பு பறக்கும் படை சோதனை: ரூ.1.60 கோடி, 4 கிலோ தங்கம் பறிமுதல்

    By dn  |   Published on : 14th March 2014 03:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    parcel

    தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தேர்தல் சிறப்பு பறக்கும்படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.1.60 கோடி ரொக்கம், 4 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி பொருள்கள் மற்றும் 40 கிலோ கவரிங் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    சேலம்: சேலம் அரபிக் கல்லூரி சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை அதிகாலை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெங்களூருவில் இருந்து கேரளத்துக்குச் சென்ற சொகுசுப் பேருந்தில் பயணம் செய்த ஏ.நவ்ஷத், எஸ்.ரியாஸ் ஆகியோரிடமிருந்து ரூ.79.90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

    விசாரணையில், அவர்கள் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த நகை வியாபாரியிடம் பணி புரிவது தெரியவந்தது.

    சீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழி கோவில் தெருவில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, புதுப்பட்டினம் நோக்கிச் சென்ற காரிலிருந்த ரூ.15 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

    நிலம் பத்திரப்பதிவுக்காக பணத்தைக் கொண்டு சென்றதாக காரிலிருந்த சீர்காழி பிடாரி வடக்குத் தெருவைச் சேர்ந்த சங்கர், பிரசாந்த் குமார் ஆகியோர் தெரிவித்தனர்.

    கவரிங் நகைகள்: சீர்காழி வட்டம், எருக்கூர் புறவழிச்சாலை ரவுண்டானாவில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, புதுச்சேரியிலிருந்து திருவனந்தபுரத்துக்குச் சென்ற ஆம்னி பேருந்தில் 4 பெட்டிகளில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான 40 கிலோ கவரிங் நகைகளைப் பறிமுதல் செய்தனர்.

    அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, மதுரையிலிருந்து தூத்துக்குடி நோக்கிச் சென்ற காரிலிருந்த இரண்டரை கிலோ தங்க நகைகள், ஐந்தரை கிலோ வெள்ளி பொருள்களைப் பறிமுதல் செய்தனர்.

    பிரபலமான நகைக்கடைக்கு அந்த நகைகள் கொண்டு செல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

    மதுரை: மதுரை சர்வேயர் காலனி அல் அமீன் பள்ளி அருகே அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, காரைக்குடியிலிருந்து வந்த காரில் இருந்த கோவிந்தராமானுஜம் என்பவரிடம் இருந்து ரூ.1.82 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல, மேலமடை அருகே காரில் வந்தவர்களிடம் இருந்து ரூ.99,500 பறிமுதல் செய்யப்பட்டது. மதுரை கடவூர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த நத்தம் துரைக்கண்ணனிடம் இருந்து ரூ.87,500 பறிமுதல் செய்யப்பட்டது.

    ராஜபாளையம்: ராஜபாளையம்-கொல்லம் சாலையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, காரில் வந்த திருநெல்வேலி மாவட்டம் தேவிப்பட்டணத்தைச் சேர்ந்த பேச்சிமுத்துவிடம் இருந்து ரூ.50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    மேற்கண்ட நபர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் நகைகளை உரிய ஆவணங்களைக் காட்டி திரும்பிப் பெற்றுச் செல்லுமாறு அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டது.

    திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த இலவசக் காலணிகள் அடங்கிய 318 மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட காலணிகள், அங்குள்ள அரசுப் பள்ளியில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டன.

    தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் இலவச விநியோகத்தைத் தடுப்பதற்காக காலணி மூட்டைகளை பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பழனி: பழனி சிவகிரிப்பட்டி புறவழிச் சாலையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, காரில் வந்த ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவரிடமிருந்து ரூ.1.60 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

    மற்றொரு காரில் பணம் எண்ணும் இயந்திரம் மற்றும் 1,340 கிராம் தங்க நகைகள், 4,216 கிராம் வெள்ளி பொருள்கள் இருந்தன.அவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.32 லட்சமாகும். விசாரணையில், பிரபல நகைக்கடைக்கு அவை கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai