சுடச்சுட

    
    ponradhaa

    தமிழக பா.ஜ.க. கூட்டணியில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெள்ளிக்கிழமை தேர்தல் பிரசாரத்தை தொடங்க இருப்பதால் அதற்குள் தொகுதிப்பங்கீட்டு பிரச்னைக்கு முடிவு வருமா என்பது தெரியவில்லை.

    தமிழகத்தில் தேமுதிக, பாமக, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி ஆகிய கட்சிகளைக் கொண்ட 3-வது அணியை பாஜக அமைத்துள்ளது.

    கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கூட்டணியை முடிவு செய்த பாஜக தலைவர்களால், தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய முடியவில்லை.

    தொகுதிப் பங்கீடு தொடர்பான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை மார்ச் 7-ஆம் தேதி பாஜக தொடங்கியது. தேமுதிக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகளின் தலைவர்களுடன் தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல. கணேசன், மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் எஸ். மோகன்ராஜுலு ஆகியோர் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றனர்.

    வெள்ளிக்கிழமை (மார்ச் 14) மாலை 3 மணிக்கு தேர்தல் பிரசாரத்தை தொடங்கப் போவதாக விஜயகாந்த் அறிவித்துள்ளதால் அதற்கு முன்பே தொகுதிப் பங்கீட்டை முடிக்க பாஜக தலைவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.

    ஆனால், தேமுதிகவும், பாமகவும் சில தொகுதிகளை விடாப்பிடியாகக் கேட்பதால் முடிவை எட்ட முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பாரிவேந்தர் போட்டியிட விரும்பும், கள்ளக்குறிச்சி தொகுதியை தேமுதிக விடாப்பிடியாகக் கேட்கிறது. தேமுதிக விரும்பும் ஆரணி அல்லது அரக்கோணத்தை விட்டுக் கொடுக்க பாமக மறுக்கிறது. பாஜக போட்டியிட விரும்பும் சேலம், மயிலாடுதுறை தொகுதிகளையும் மற்ற கட்சிகள் கேட்கின்றன. பாமகவுக்கு இணையான தொகுதிகளை மதிமுக கேட்கிறது.

    இதனால் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது.

    இந்நிலையில் வியாழக்கிழமை பாஜக கூட்டணியில் தேமுதிகவுக்கு 14, பாஜக, பாமகவுக்கு தலா 8, மதிமுகவுக்கு 6, மீதி நான்கு தொகுதிகள் நான்கு சிறிய கட்சிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

    தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்டதாக சில ஊடகங்களில் வெளியான பட்டியல் தவறானது. வெள்ளிக்கிழமை இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    பொன்.ராதாகிருஷ்ணன் தில்லி பயணம்

    பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பதால் கட்சியின் மேலிடத் தலைவர்களுடன் ஆலோசிப்பதற்காக தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் அவசர பயணமாக வியாழக்கிழமை இரவு தில்லி சென்றார்.

    இது குறித்து வியாழக்கிழமை இரவு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் இல. கணேசன், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இதுவரை நடந்துள்ள பேச்சுவார்த்தை விவரங்களை பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் தெரிவிப்பதற்காக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை இரவு தில்லி புறப்பட்டுச் சென்றார்.

    மேலிடத் தலைவர்களுடன் ஆலோசித்த பிறகு வெள்ளிக்கிழமை (மார்ச் 14) தொகுதிப் பங்கீடு குறித்த விவரங்களை ராஜ்நாத் சிங் அறிவிப்பார். தொகுதிப் பங்கீட்டை விரைவில் முடிக்க வேண்டும் என்றே பா.ஜ.க. விரும்புகிறது. வெள்ளிக்கிழமை பட்டியல் அறிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து ஓரிரு நாளில் பாஜக வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும் என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai