சுடச்சுட

    
    tn_leaders

    அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தையும் தொடங்கி விட்டிருக்கிறது. தி.மு.க. கூட்டணியிலும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டு தி.மு.க.வின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். காங்கிரஸ் தி.மு.க.வின் கூட்டணியில் சேருமா, சேர்க்கப்படுமா என்பது தெளிவாக்கப்படவில்லையே தவிர, அப்படி காங்கிரஸ் கூட்டணியில் இல்லாமல் போனாலும், பிரசாரத்தைத் தொடங்கும் நிலையில்தான் தி.மு.க. கூட்டணி இருக்கிறது.

    இந்த நிலையில், பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில், கூட்டணி அறிவிக்கப்பட்டு விட்டாலும் இன்னும் தொகுதிப் பங்கீட்டிலான சிக்கல்கள் தீர்ந்தபாடில்லை. அரசியல் நிர்பந்தங்களால் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள நான்கு கட்சிகளும் இணைந்து செயல்பட்டாக வேண்டிய கட்டாயம் இருந்தாலும்கூட, தொகுதிப் பங்கீடு கூட்டணியின் சுமுக உறவை பாதிக்கக் கூடும் என்று பரவலாக ஒரு கருத்து எழுந்திருக்கிறது.

    ""தொகுதிகளைப் பிரித்துக் கொள்வதில் பிரச்னைகள் இருப்பது உண்மைதான். தி.மு.க., அ.தி.மு.க. போல இன்னாருக்கு இவ்வளவு தொகுதிகள்தான், இன்னின்ன தொகுதிகள்தான் என்று மேலாதிக்கம் செலுத்தும் நிலையில் நாங்களும் இல்லை. இன்னின்ன இடங்களைத் தந்தால் தாருங்கள், இல்லையென்றால் விட்டுவிடுங்கள் என்று சொல்லும் நிலையில் எங்கள் கூட்டணிக் கட்சிகளும் இல்லை. தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் ஒரு வலுவான மாற்று ஏற்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தாலும், நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பா.ஜ.க.வின் கூட்டணி ஆட்சி ஏற்பட வேண்டும் என்கிற நோக்கத்துடனும் ஏற்பட்ட கூட்டணி இது. இதில், பல தொகுதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு கணிசமான செல்வாக்கும் வாக்கு வங்கியும் இருக்கிறது. அதனால், யார் எதை விட்டுக் கொடுப்பது, எதை வைத்துக் கொள்வது என்கிற பிரச்னை ஏற்படுவது இயல்புதான். பேசிக் கொண்டிருக்கிறோம். முடிவாகிவிடும்'' என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தொகுதிப் பங்கீட்டுச் சிக்கலின் காரணத்தை விளக்கினார்.

    வட மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் தே.மு.தி.க.வும், பா.ம.க.வும் கணிசமான செல்வாக்குப் பெற்ற கட்சிகளாகத் திகழ்கின்றன. இந்த இரண்டு கட்சிகளின் வாக்கு வங்கியுடன், பரவலாகக் காணப்படும் நரேந்திர மோடி ஆதரவு அலையும் சேரும்போது பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு காணப்படுகிறது. இதன் அதிகபட்ச பலன் தங்களுக்குத்தான் கிடைக்க வேண்டும் என்று பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் விரும்புகின்றன.

    அதேபோல, கொங்கு மண்டலம் என்று அழைக்கப்படும் பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மக்களவைத் தொகுதிகளில் தே.மு.தி.க., பா.ஜ.க., ம.தி.மு.க. ஆகிய மூன்று கட்சிகளுக்கும் கணிசமான வாக்கு வங்கி உண்டு. சேலம் தொகுதியில் பா.ம.க.வுக்கு வலுவான கட்சி அமைப்பு எப்போதுமே உண்டு. இங்கே தொகுதிகளைப் பிரித்துக் கொள்வதில் கருத்து வேறுபாடு காணப்படுகிறது. தான் ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதி என்பதால் பா.ஜ.க. கோவை மக்களவைத் தொகுதியைக் கோருவதும், ம.தி.மு.க. ஈரோடு மக்களவைத் தொகுதியைத் தக்கவைத்துக் கொள்ள நினைப்பதும் நியாயம்தான் என்றாலும், ஒதுக்கப்படும் தொகுதிகளில் நிச்சயமான வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆவல் நான்கு கட்சிகளிடமும் காணப்படுகின்றன.

    ""இந்தப் பிரச்னைகள் இருந்தாலும் கூட்டணி பிரிந்து விடாது. பா.ஜ.க.வுக்குக் கூட்டணி இருந்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இப்படி ஒரு கூட்டணி இல்லாவிட்டால், நரேந்திர மோடிக்கான ஆதரவை வாக்குகளாக்கி, சீட்டுகளாக்க அந்தக் கட்சியால் முடியாது. பா.ம.க.வுக்கும், ம.தி.மு.க.வுக்கும் தங்களது மாநிலக் கட்சி அந்தஸ்தையும், சின்னத்தையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறினால் அவர்களுக்குத்தான் இழப்பு, கூட்டணிக்கு அல்ல. பா.ஜ.க., தே.மு.தி.க. மட்டுமே கூட்டணியில் இருந்தால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாவிட்டாலும் கணிசமான வாக்குகளைப் பெற்று பல இடங்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றுவிட முடியும்'', என்று தொகுதிப் பங்கீட்டுப் பிரச்னை குறித்து தே.மு.தி.க. சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.மற்ற கட்சிகளைப் பற்றிக் குறிப்பிட்ட அவர் தே.மு.தி.க.வின் நிர்பந்தங்கள் பற்றிப் பேசவில்லை. தே.மு.தி.க.வுக்கும் இந்தக் கூட்டணி ஒரு கட்டாயத் தேவை என்று தெரிகிறது.

    ""பா.ஜ.க. கூட்டணியில் அதிக இடங்களில் போட்டியிடும் பெரிய கட்சியாக தே.மு.தி.க. இருப்பதால்தான், அடுத்த சட்டப் பேரவைத் தேர்தலில், தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக தே.மு.தி.க. மதிக்கப்படும். கணிசமான மக்களவைத் தொகுதிகளில் அந்தக் கட்சி வெற்றி பெறுகிறதா என்பதல்ல முக்கியம், கணிசமான வாக்குகளைப் பெறுகிறதா என்பதும், போட்டியிடும் தொகுதிகளில் எத்தனை தொகுதிகளில் இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறது என்பதும்தான் தே.மு.தி.க.வின் வருங்காலத்தை நிர்ணயிக்கப் போகிறது. தனித்துப் போட்டியிட்டால், தே.மு.தி.க. பல தொகுதிகளில் டெப்பாசிட் இழக்க நேரிடும் என்பது மட்டுமல்ல, மாற்று சக்தியாக உருவாகவே முடியாமல் போய்விடும். படு தோல்வி அடைந்த தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் ஆளும் கட்சிக்குத் தாவி விடுவார்கள். அதனால் தே.மு.தி.க.வும் கூட்டணியிருந்து விலகாது'' என்று கருத்துத் தெரிவித்தார் இந்தக் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்ட முக்கியமான பிரமுகர் ஒருவர். பா.ஜ.க. கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் கூட்டணியில் தொடர்ந்தாக வேண்டிய நிர்பந்தம் உள்ள நிலையில் கூட்டணி பிரிவதற்கான வாய்ப்பு காணப்படவில்லை. ஆனால், தொகுதிப் பங்கீட்டை விரைவில் முடித்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் தொடங்கப்படாவிட்டால், இந்தக் கூட்டணிக்கு இருக்கும் ஆதரவும் எதிர்பார்ப்பும் குலைந்துவிடும் அபாயம் காணப்படுகிறது.

    ""தனது கட்சிக்கு என்ன லாபம் என்று கருதாமல், எந்தக் கட்சி போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்கிற கண்ணோட்டத்தில் விரைந்து தொகுதிப் பங்கீடு முடிய வேண்டும். இனியும் இழுத்துக் கொண்டு போனால் கூட்டணிக்கு நல்லதல்ல'' என்று நான்கு கட்சியின் தலைவர்களுமே கூறுகிறார்கள். தொகுதிப் பங்கீடு பிரச்னை வந்தால் சொல்வதுபோல நடப்பதில்லை என்பதுதான் பிரச்னை.

    பா.ஜ.க. கூட்டணி பற்றி தி.மு.க. தலைவர் ஒருவர் கூறிய கமெண்ட், ""பா.ஜ.க. கூட்டணி பிரியுமா தொடருமா என்று கேட்டால், பிரியாது தொடரும். சட்டப் பேரவைத் தேர்தலிலும் தொடருமா, பிரியுமா என்று கேட்டால், தொடராது, பிரியும்!''

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai