Enable Javscript for better performance
\\\"மரபணு மாற்ற விதைகளை அனுமதிக்க மாட்டோம்\\\'- Dinamani

சுடச்சுட

    
    jaya

    மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கும் ஆட்சி அமைந்தால் விவசாயிகளை பாதிக்கும் மரபணு மாற்ற விதைகளை தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம் என்று முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தெரிவித்தார்.

    காங்கயத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

    மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி, கோதுமை, சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்களின் 200 வகைகளை தனியார் நிறுவனங்கள் மூலமாக சோதித்துப் பார்க்க மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அண்மையில் அனுமதி அளித்துள்ளது.

    மனிதர்களையும், விவசாய விளை நிலங்களையும் பாதிக்கும் மத்திய அரசின் இந்தக் கள ஆய்வு, பன்னாட்டு விதை நிறுவனங்களை மகிழ்ச்சியுறச் செய்யுமே தவிர, விவசாயிகளுக்கு துன்பத்தையே தரும். மரபணு மாற்றுப் பயிர் மூலமாக விளையும் பயிர்களில் இருந்து விதைகளைப் பெற முடியாது.

    மீண்டும் நாம் பயிரிட வேண்டுமென்றால் விதைகளை வழங்கிய தனியார் நிறுவனத்தைத்தான் நாட வேண்டும். இதன் மூலமாக உணவு தானிய உற்பத்தி என்பது ஒரு சில தனியார் நிறுவனங்களின் ஏக போக உரிமையாகிவிடும். இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை தமிழகத்தில் பரிசோதிக்க, அதிமுக அரசு அனுமதி வழங்காது.

    கொங்கு மண்டலப் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே பாதிக்கும் வகையில் கெயில் நிறுவனம் மூலமாக கேரள மாநிலம், கொச்சி திரவ எரிவாயு முனையத்தில் இருந்து பெங்களூர் வரை, தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 7 மாவட்ட விவசாய நிலங்களின் வழியாக எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களை அமைக்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டது.

    இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் நெடுஞ்சாலைகளின் ஓரமாக குழாய்கள் பதிக்க கெயில் நிறுவனம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அரசு முடிவெடுத்தது.

    தமிழக அரசின் முடிவுகள் சென்னை உயர் நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டன. ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் நமக்கு சாதகமான உத்தரவு கிடைக்கப் பெறாததால், உச்ச நீதிமன்றத்தை அணுகி உள்ளோம். உச்ச நீதிமன்றம் தற்போதுள்ள நிலை தொடர உத்தரவிட்டுள்ளது.

    இந்தப் பணிகளை கெயில் நிறுவனம் தாற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. மற்ற மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலை வழியாக எரிவாயு குழாய்களை கெயில் நிறுவனம் எடுத்துச் செல்லும்போது தமிழகத்தில் மட்டும் அது ஏன் சாத்தியமில்லை? மற்ற மாநிலங்களுக்கு ஒரு நீதி, தமிழகத்துக்கு ஒரு நீதியா?

    இப்படி தமிழக விவசாயிகளுக்கு மட்டும் எதிராக செயல்படும் மத்திய காங்கிரஸ் அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் சம்மட்டி அடி கொடுக்க வேண்டும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai