Enable Javscript for better performance
மின் உற்பத்தி விவகாரம்: கருணாநிதிக்கு ஜெயலலிதா பதில்- Dinamani

சுடச்சுட

    
    jaya_cm

    தமிழகத்தில் மின் உற்பத்தி தொடர்பாக கருணாநிதி கூறிய குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஜெயலலிதா திருப்பூர் மற்றும் காங்கேயம் பிரசாரக் கூட்டங்களில் பதிலளித்தார்.

    இது தொடர்பாக, திருப்பூரில் முதல்வர் ஜெயலலிதா பேசியது: அரசின் பகீரத முயற்சியால், சுமார் 2,500 மெகாவாட் அளவுக்கு கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் 3,300 மெகாவாட் மின்சாரத்தை அடுத்த 15 ஆண்டுகளுக்கு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் விரைவில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக விளங்கும்.

    எதிர்கால மின் தேவைக்காக 5,300 மெகாவாட் அளவுக்கு புதிய திட்டங்களைச் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த இரண்டே முக்கால் ஆண்டுகளில் 33 இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் ரூ.32 ஆயிரத்து 706 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதனால் 2 லட்சம் பேருக்கு நேர்முக மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    தமிழகத்தில் மின் உற்பத்தியும், தொழில் வளர்ச்சியும் பெருகி வருகின்றன. ஆனால் திமுக தலைவர் கருணாநிதியோ என்னால் (ஜெயலலிதா) அறிவிக்கப்பட்ட சில மின் உற்பத்தித் திட்டங்கள் குறித்து கேள்வி, பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    இந்த அறிக்கையில் 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் விரிவாக்க அனல் மின் நிலையத் திட்டம், கடந்த 29-3-2012இல் தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதற்கு அடிக்கல் நாட்டவே 2 ஆண்டுகள் என்றால், மின் உற்பத்தி செய்ய எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று கருணாநிதி கேட்டுள்ளார்.

    எந்த ஒரு மின்திட்டத்தை அறிவித்தாலும், அதைத் துவக்குவதற்கு முன் பல ஆய்வுகள் நடத்த வேண்டும். பல்வேறு அனுமதிகள் பெற வேண்டும். மாற்றாந்தாய் மனப்போக்குடன் செயல்படும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசிடமிருந்து அனுமதி பெற வேண்டும். இத் திட்டத்துக்கான அறிவிப்பை வெளியிட்டபோது, மத்திய காங்கிரஸ் ஆட்சியில் திமுகவும் இடம்பெற்றிருந்தது.

    தமிழக அரசின் தொடர் நடவடிக்கையின் காரணமாக, மத்திய சுற்றுச் சூழல் அனுமதி 24-1-2013-இல் கிடைத்தது. இதன்பின் ஒப்பந்தப் புள்ளிகள் ஆய்வு செய்யப்பட்டு, தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான பணி ஆணை அந் நிறுவனத்துக்கு கடந்த 27-2-2014-இல் வழங்கப்பட்டது.

    மின்திட்டம் துவங்கப்படுவதற்கு தேவையான அனுமதிகளை பெற்று, சர்வதேச ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு முறையாக ஆய்வு செய்யப்பட்டு, அதற்குப் பிறகு பணி ஆணைகள் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும்போது இந்த கால அளவு என்பது குறைவானதுதான்.

    ஒப்பந்தப் புள்ளிகள் இல்லாமல், 2 ஜி அலைக்கற்றை உரிமம் வழங்கியதைப் போல துரிதமாக செயல்பட எங்களுக்குத் தெரியாது. மத்தியிலும் மாநிலத்திலும் தான் ஆட்சியில் இருந்த காலத்தில் அனைத்து மின் திட்டங்களையும் அதோகதியில் விட்ட கருணாநிதி, இப்போது மும்முரமாக நடந்து வரும் மின்திட்டங்கள் குறித்து வினவியுள்ளது வேடிக்கையாக இருக்கிறது என்றார் முதல்வர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai