சுடச்சுட

  
  dms

  12-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் 2.5 கோடி டன் உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மத்திய திட்டக்குழு உறுப்பினர் கே.கஸ்தூரிரங்கன் தெரிவித்தார்.

  வேளாண் அறிவியலாளர் "நார்மன் போர்லாக்' நூற்றாண்டு விழாவையொட்டி, வேளாண்மை குறித்த கருத்தரங்கம் தொடக்க விழா சென்னை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

  விழாவில் கஸ்தூரிரங்கன் பேசியதாவது:

  கடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் வேளாண்மை வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவில் பல கோடி பேருக்கு உணவு அளிப்பது தவிர, தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருள்களையும் வேளாண்மை வழங்குகிறது.

  11-வது ஐந்தாண்டு திட்டத்தில் பாசன வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. வேளாண்மையில் முதலீடு செய்வது மற்றும் தொழில்நுட்பங்களுக்கு இடையேயான இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது. காய்கறி மற்றும் பழங்கள் உற்பத்தி செய்வதும் உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வருவாயும் அதிகரித்துள்ளது.

  தனி மனிதரின் வேளாண் பொருள்கள் நுகர்வு உயர்ந்துள்ளது. வேளாண் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்து அறிவுறுத்தப்படுகிறது.

  12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் 2.5 கோடி (25 மில்லியன்) டன் உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 1 கோடி டன் அரிசி, 80 லட்சம் டன் கோதுமை, 40 லட்சம் டன் பருப்பு வகைகள், 30 லட்சம் டன் சிறுதானியங்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  இதுதவிர, காய்கனி உற்பத்தியில் 7.2 சதவீத வளர்ச்சியை எட்டவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேளாண் பல்கலைக்கழகங்கள், விவசாயிகள், சுய உதவிக்குழுக்கள் ஆகியோரிடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்தப்படும்.

  விவசாயிகளுக்கு உதவும் வகையில் 11-வது ஐந்தாண்டுத் திட்ட இறுதியில் மொத்தம் 630 கிரிஷ் வித்யான் கேந்திரங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார் கஸ்தூரிரங்கன்.

  நிகழ்ச்சியில், ஆராய்ச்சி நிலையத்தின் நிறுவனர் எம்.எஸ்.சுவாமிநாதன் பேசுகையில், "விவசாயத்துக்கு எது நல்லது என்பது விவசாயிகளுக்குத் தெரியும். அவர்களின் கருத்துகளையும் கேட்க வேண்டும். அவர்களுக்கு மரியாதை தரவேண்டும்' என்றார்.

  ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் மதுரா சுவாமிநாதன், செயல் இயக்குநர் அஜய் பரிடா, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் ஜெனரல் எஸ்.ஐயப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கம் 15-ஆம் தேதி நிறைவடைகிறது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai