சுடச்சுட

    

    அதிமுக, திமுகவுக்குப் பாடம் புகட்ட வேண்டும்: விஜயகாந்த்

    By dn  |   Published on : 15th March 2014 01:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    canvas1

    அதிமுக, திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்று மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

    தேமுதிக வடசென்னை வேட்பாளர் எம்.சவுந்திரபாண்டியனை ஆதரித்து, திரு.வி.க.நகர் பகுதியில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட விஜயகாந்த் பேசியதாவது:

    திமுக ஆட்சியில் இலவச டி.வி. கொடுத்தார்கள். இப்போது அதிமுக ஆட்சியில் இலவசம் என்று சொல்லாமல், விலையில்லாப் பொருள்கள் என்று மிக்ஸி, கிரைண்டர் போன்றவற்றைத் தருகின்றனர்.டி.வி.யைக் கொடுத்த திமுக, இப்போது இலவசம் கொடுப்பதைத் தவறு என்று கூறுகிறது. இது என்ன நியாயம்?

    மின்சாரமே இல்லாமல், மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி போன்றவற்றை அதிமுக அரசு இலவசமாகக் கொடுத்து என்ன பயன்?

    அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது என்று கூறினர். ஆனால் இதுவரை மின் பிரச்னை தீரவில்லை. தமிழகம் இருண்ட மாநிலமாகவே இருந்தது. இதனால் சிறு, குறு தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்துக்கு வர வேண்டிய 12 ஆயிரம் கோடி தொழில் முதலீடு, கர்நாடக மாநிலத்துக்குச் சென்றுவிட்டது. இதுதொடர்பான அக்கறை அதிமுக அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

    அம்மா உணவகம், அம்மா குடிநீர் என்றெல்லாம் தொடங்கியுள்ளனர். இதனால் குறும் தொழிலாளர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இதை ஒரு அரசு செய்யலாமா?

    கையாலாகாத பிரதமர் என்று மன்மோகன் சிங்கை ஜெயலலிதா கூறுகிறார். தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு நடத்துகிறது என்று ஜெயலலிதா கூறுகிறார்.

    இதே குற்றச்சாட்டை அதிமுக அரசுக்கு எதிராக நான் கூறினால், என் மீது வழக்கு போடுகிறார். இதையெல்லாம் கண்டு நாங்கள் அஞ்சமாட்டேன்.

    அமைதி, வளம், செழிப்பு என்று அதிமுக கூறுகிறது. மக்கள் அமைதியாக இருப்பதன் மூலம், தங்கள் வளத்தைப் பெருக்கிக் கொண்டு செழிப்பாக இருப்பதைத்தான் அப்படிக் கூறுகின்றனர்.

    அதிமுகவும், திமுகவும் நல்லாட்சி புரிய வேண்டும் என்றுதான் மக்கள் வாக்களித்தார்கள். அப்படி எதுவும் செய்யாமல் தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களிடம் திமுக, அதிமுகவும் கெஞ்சுவது ஏன்?

    எனவே, அதிமுக - திமுகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால், மக்கள் மாண்டது போதும், அதிமுக, திமுக ஆண்டது போதும் என்று இரு கட்சிகளையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றார் விஜயகாந்த்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai