சுடச்சுட

    
    cpm

    வரும் மக்களவைத் தேர்தலில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா 9 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

    இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

    வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரு கட்சிகளும் தலா 9 தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள்: கோவை, மதுரை, கன்னியாகுமரி, வட சென்னை, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், விழுப்புரம் (தனி), தஞ்சாவூர்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள்: தென்காசி (தனி), நாகப்பட்டினம் (தனி), புதுச்சேரி, திருப்பூர், சிவகங்கை, தருமபுரி, கடலூர், திருவள்ளூர் (தனி), தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் என்றனர்.

    அதிமுக, திமுகவுடன் நேரடி மோதல்: இந்த 18 தொகுதிகளில் தென்காசி, திருவள்ளூர் தவிர மற்ற 16 தொகுதிகளில் அதிமுக, திமுகவுடன் இடதுசாரிகள் நேரடியாக மோதுகின்றனர். தென்காசியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, திருவள்ளூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் ஆகியோரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தென்காசி, நாகை, திருவள்ளூர் ஆகிய 3 தனித் தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கட்சி விழுப்புரம் தனி தொகுதியிலும் போட்டியிடுகிறது.

    கூட்டணியிலிருந்து இடதுசாரி கட்சிகளை அதிமுக வெளியேற்றியதைத் தொடர்ந்து இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது என முடிவுசெய்து போட்டியிடும் தொகுதிகளையும் அறிவித்துள்ளனர்.

    நாளை வேட்பாளர் பட்டியல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) வெளியிடப்படும் என ஜி. ராமகிருஷ்ணனும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வரும் திங்கள்கிழமை (மார்ச் 17) வெளியிடப்படும் என தா. பாண்டியனும் தெரிவித்தனர்.

    திமுகவுக்கு ஆதரவு இல்லை

    இடதுசாரி கட்சிகள் போட்டியிடாத 22 தொகுதிகளில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக ஆகிய நான்கு கூட்டணிகளுக்கு ஆதரவு அளிப்பதில்லை என முடிவு செய்துள்ளோம். ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட மற்ற கட்சிகள் ஆதரவு கேட்டால் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆலோசித்து முடிவு செய்யும் என ஜி. ராமகிருஷ்ணனும் தா. பாண்டியனும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai