சுடச்சுட

    
    Rajnath

    பாஜக கூட்டணி பற்றிய இறுதி முடிவை பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் அறிவிப்பார் என அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் தெரிவித்தார்.

    தமிழகத்தில் பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இது குறித்து பாஜக மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய முரளிதரராவ் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) இரவு கூறியது:

    பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடியாத நிலையில் தேமுதிக 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பிரசாரத்தையும் தொடங்கியுள்ளார். தேர்தல் நெருங்குவதால் மற்ற கட்சிகளும் பிரசாரத்தை உடனே தொடங்க வேண்டியுள்ளது. இந்த குழப்பமான சூழ்நிலை குறித்து கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங்கிடம் எடுத்துக் கூறுவோம்.

    பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக, இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இரண்டு கட்சி இருந்தால் தொகுதிப் பங்கீட்டை சுலபமாக முடித்து விடலாம். பல கட்சிகள் இருப்பதால் தொகுதிப் பங்கீட்டை முடிப்பது அவ்வளவு எளிதானதல்ல.

    வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பாமக, மதிமுகவுடனான தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. தேமுதிகவுக்கு தொகுதிகளை இறுதி செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. இதுவரை நடந்த பேச்சுவார்த்தை விவரங்களை கட்சியின் தலைவர் ராஜ்நாத்சிங்கிடம் எடுத்துக்கூறுவோம். அவர் இறுதி முடிவை எடுத்து தொகுதிப் பங்கீட்டை அறிவிப்பார் என்று தெரிவித்தார்.

    பேட்டியின்போது தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல.கணேசன், தேசியச் செயலாளர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், மாநில துணைத் தலைவர் ஹெச்.ராஜா, மாநில பொதுச் செயலாளர்கள் வானதி சீனிவாசன், முருகானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai