Enable Javscript for better performance
திமுக ஆட்சித் திட்டங்களை வேறு யாரும் நிறைவேற்ற முடியாது- Dinamani

சுடச்சுட

  

  திமுக ஆட்சித் திட்டங்களை வேறு யாரும் நிறைவேற்ற முடியாது

  By dn  |   Published on : 15th March 2014 03:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  canvas2

  திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள்போன்று வேறு யாரும் நிறைவேற்ற முடியாது என, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

  கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எப்.எம்.ராஜரத்தினத்தை ஆதரித்து, நாகர்கோவில் நாகராஜா திடலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசியது:

  மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் அங்கம் வகித்த திமுக தமிழக மக்களுக்கு எதையும் செய்யவில்லை என ஜெயலலிதா குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார். சேது சமுத்திர திட்டத்தால் பொருளாதாரம் மேம்படும், நாடு வளர்ச்சி அடையும் என்ற நோக்கத்தில் மதுரையில் அதற்காக திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் சோனியா காந்தி, மன்மோகன் சிங் மட்டுமன்றி, பாஜக கூட்டணியில் அங்கும் வகிக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக, கம்யூனிஸ்ட் கட்சியினரும் கலந்துகொண்டனர். ரூ.600 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் இப்போது முடக்கப்பட்டுள்ளது.

  நீதிமன்றத்தில் மத்திய அரசு உரிய விளக்கம் அளித்தது. ஆனால், அதற்கு எதிராக அதிமுக அரசு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, சேது சமுத்திர திட்டத்தை நிறுத்த வேண்டும் என கூறியது. ஆனால், இதே அதிமுகவின் 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவோம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

  இதுமட்டுமல்ல கப்பல், நெடுஞ்சாலைத் துறை மூலம் தமிழகத்தில் சாலைகள் விரிவாக்கம், துறைமுக விரிவாக்கம், சரக்குப் பெட்டகம் கையாளுதல் உள்ளிட்ட திட்டங்கள், ரூ.1566 கோடியில் சேலம் உருக்காலை, ரூ.1650 கோடியில் சென்னை துறைமுகம், ரூ.640 கோடியில் சென்னையில் இணைப்புச் சாலை திட்டம், ரூ.908 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ரயில்வே அகலப்பாதை திட்டம், ரூ.1828 கோடியில் 90 ரயில்வே மேம்பாலங்கள் கட்ட அனுமதி, மெட்ரோ ரயில் திட்டம், திருச்சி, மதுரை கோவையில் ரயில் நிலையங்கள் விரிவாக்கம், 50 காசில் தொலைபேசி உள்ளிட்ட திட்டங்களைக் கொண்டுவந்தோம். மேலும், விவசாயிகளின் கடன் ரூ.7200 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் செய்யப்பட்ட மக்கள் நலப் பணிகள் போன்று இனி யாரும் செய்ய முடியாது.

  குமரியில் திருவள்ளுவர் சிலையை திமுக அமைத்தது. அதற்காக அந்தச் சிலை பாரமரிப்பை அதிமுக கைவிட்டது. இதை எதிர்த்து திமுக போராட்டம் நடத்தும் என கருணாநிதி அறிக்கை வெளியிட்டவுடன், சிலை பராமரிப்புப் பணி தொடங்கப்பட்டது.

  கன்னியாகுமரியில் காமராஜருக்கு மணிமண்டபம், குமரி மாவட்டத்தில் ரூ.110 கோடியில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டம், கீழமணக்குடி-மேலமணக்குடி இணைப்புப் பாலம், தோவாளையில் தேசிய மலரகம், ஆரல்வாய்மொழி-நெடுமங்காடு ஆண்டித்தோப்பில் இணைப்புப் பாலம், கொல்லங்கோடு-மெதுகும்பல் கூட்டுக் கூடிநீர்த் திட்டம் போன்ற திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியது.

  ஆனால், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை அதிமுக அரசு முடக்கிவைத்துள்ளது என்றார் ஸ்டாலின்.

  கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் என். சுரேஷ்ராஜன் தலைமை வகித்தார். புஷ்பலீலா ஆல்பன் எம்.எல்.ஏ., அவைத் தலைவர் ஜோசப் ராஜ், அருள்ராஜ், நகரச் செயலாளர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  முன்னதாக, மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளையில் தொடங்கினார். தக்கலை, கருங்கல் உள்ளிட்ட இடங்களில் திறந்த வேனில் இருந்தவாறே அவர் பேசினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai