Enable Javscript for better performance
தேமுதிகவா? பாமகவா? - Dinamani

சுடச்சுட

    
    vijayakanth_ramadoss

    பாஜக கூட்டணியில் திருப்பூர் தொகுதி காரணமாகவே சிக்கல் நீடிக்கிறது. அது மட்டுமல்லாமல் சேலம், கிருஷ்ணகிரியைத் தவிர்த்து வடமாவட்டங்களில் உள்ள தொகுதிகள் அனைத்திலும் போட்டியிட வேண்டுமென்று பாமக விரும்புவதுதான் பிரச்னை நீடிப்பதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

    இதனால் பாஜக கூட்டணியில் நீடிக்கப் போவது பா.ம.க.வா அல்லது தேமுதிகவா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    கூட்டணியில் சிக்கல் ஏன்? தனது பிரசாரத்தைத் தொடங்கிவிட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த், இன்னும் தொகுதிப் பங்கீடு முடியாததால், பாஜக குறித்தோ கூட்டணி குறித்தோ எதுவும் பேச முடியவில்லை. அவர் "முரசு' சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று கூறித் தனது பிரசாரத்தை தொடங்கினார்.

    பாட்டாளி மக்கள் கட்சி தான் ஏற்கெனவே அறிவித்த பத்து தொகுதிகளில் சேலம் (தேமுதிக), கிருஷ்ணகிரி (பாஜக) தவிர ஏனைய எட்டு தொகுதிகளையும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லாமல் இருப்பதுதான் பிரச்னைக்குக் காரணம் என்று தெரிகிறது. அதேபோல, கோவை (பாஜக), ஈரோடு (மதிமுக) தொகுதிகள் தரப்படாத நிலையில் திருப்பூர் தொகுதியை தேமுதிக கேட்கிறது. ஆனால் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு அந்தத் தொகுதி தரப்பட வேண்டும் என்று பாஜக விரும்புகிறது.

    ""பாமக தனக்கு சாதகமான எல்லா தொகுதிகளையும் எடுத்துக் கொள்வதற்குக் கூட்டணியின் அவசியம்தான் என்ன? வடமாவட்டங்களில் குறைந்தது நான்கு தொகுதிகளையாவது பாமக விட்டுக் கொடுக்க முன் வந்தால் சிக்கல் தீர்ந்து விடும். கடந்த 2009 தேர்தலில் தனித்து நின்று தேமுதிக 86,000-த்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்ற தொகுதி திருப்பூர். கோவையும், ஈரோடும் தரப்படாத நிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு பொள்ளாச்சி அல்லது கரூர் தொகுதியைக் கொடுத்து தேமுதிகவுக்கு திருப்பூர் தொகுதியை ஒதுக்கி விட்டாலே பிரச்னை தீர்ந்துவிடும். நீங்கள் அரிசி கொண்டு வாருங்கள், நாங்கள் உமியைக் கொண்டு வருகிறோம், இருவரும் ஊதி ஊதி பங்கு போட்டுக் கொள்ளலாம் என்றால் எப்படி?'' என்பது தேமுதிக தரப்புக் கேள்வி.

    திருப்பூர் தொகுதியில் தேமுதிகவுக்குக் கணிசமான வாக்குகள் இருப்பதைக் கடந்த தேர்தல் நிரூபித்திருக்கிறது. இந்த நிலையில் தேமுதிக இல்லாமல் பாஜக கூட்டணி திருப்பூரில் போட்டியிடுவதால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை என்பதையும் தேமுதிகவினர் சுட்டிக் காட்டுகிறார்கள்.

    ""என்னதான் பாமக செல்வாக்கு, நரேந்திர மோடி அலை என்றெல்லாம் சொன்னாலும் தேமுதிக இல்லாமல் அந்தக் கூட்டணி வலிமையான கூட்டணியாகக் கருதப்படாது. அதேபோல, தேமுதிகவும், பாஜக அணியில் இல்லாமல் போனால் பலவீனமான கட்சியாகிவிடும். தனது சின்னத்தையும், கட்சியின் மாநில அந்தஸ்தையும் தக்க வைத்துக் கொள்வதற்காக பாமக மேலும் இரண்டு தொகுதிகளை விட்டுக் கொடுத்தாக வேண்டும்'' என்று கருத்துத் தெரிவித்தார் மதிமுக பிரமுகர் ஒருவர்.

    தேமுதிக தரப்பு, திருப்பூர் தொகுதி விட்டுத் தரப்பட்டால் போதும் என்கிற நிலைக்கு இறங்கி வந்து விட்டது. ஆனால், பாமக தரப்பு தனது பிடிவாதத்தை தளர்த்துவதாக இல்லை. இந்த நிலையில் பாஜகவின் நிலைமை தர்மசங்கடமாகி விட்டிருக்கிறது. பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு ஏற்படாவிட்டால், பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறப் போவது (வெளியேற்றப்படப் போவது) பாமகவா, தேமுதிகவா என்பதுதான் கேள்வி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai