Enable Javscript for better performance
நீதிபதிகளுக்கெல்லாம் நீதிபதி ராமபிரான்- Dinamani

சுடச்சுட

  
  judge

  அறத்தை நிலை நாட்டுவதற்காகவே ராம அவதாரத்தை கம்பர் படைத்தார் என்றும், அறத்தை நிலை நாட்டுவதால் ராமாயணம் சட்ட நூலாகவும், நீதிபதிகளுக்கெல்லாம் நீதிபதியாக ராமபிரான் விளங்குவதாகவும் நீதியரசர் ஏ.ஆர். லெட்சுமணன் புகழாரம் சூட்டினார்.

  காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் கம்பன் மணி மண்டபத்தில் கம்பன் திருநாள் வெள்ளிக்கிழமை துவங்கியது. விழாவுக்கு பேராசிரியர் சாரதா நம்பி ஆரூரன் தலைமை வகித்தார். கம்பன் அடிசூடி வரவேற்றார். விழாவில், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். லெட்சுமணன் பேசியதாவது:

  கிட்டதட்ட அரை நூற்றாண்டுகளுக்கு முன் செட்டிநாட்டைச் சேர்ந்த சா. கணேசன் என்ற தேசியவாதிதான் கம்பனை நாடறியச் செய்தார். காரைக்குடியில் தொடங்கிய இந்த வேள்விதான் இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. கம்பன் கழகங்களில் சாதி, சமயம், இனம், மொழி, கட்சி, தொழில், நாடு என்ற பேச்சுக்கு இடமில்லை. கம்பன் பற்றிய பேச்சுக்கு மட்டுமே இடம் உண்டு. இந்திய அரசியலமைப்புச் சட்டம் சாதிக்க முடியாததை கம்பர் எளிதாகச் சாதித்து விட்டார்.

  சா. கணேசன் தன் பெயரையே கம்பன் அடிப்பொடி என மாற்றிக் கொண்டது கம்பனின் மேல் கொண்ட பற்று. நம் நாட்டிற்கு சரியாக விளங்குபவர்கள் கம்பரும், திருவள்ளுவருமே. திருவள்ளுவரின் இலக்கணத்திற்கு இலக்கியமாக அமைந்தது ராமாவதாரம். ராமாயணத்திற்கு கம்பர் வைத்த பெயர் ராமாவதாரம்.

  நீங்காத நற்குணங்கள் உடையவர், நீங்காத வெற்றி உடையவன், செய் நன்றி அறிபவன், அறம் அறிந்தவன், சொல் தவறாதவன், உறுதியான விரதம் பூண்டவன், ஒழுக்கம் காப்பவன், உயிர்களுக்கு நன்மை புரிபவன், பகுத்தறிவு உடையவன், திறமை உடையவன், கண்ணுக்கு இனியவன், புலனடக்கம் உடையவன், சீலத்தை உடையவன், நீங்காத ஒளி பொருந்தியவன், அழுக்காறு அற்றவன், வீரம் மிக்கவன் என 16 நற்குணங்களை உடைய ஒரு சிறந்த மனிதனை உலகிற்கு காட்ட வேண்டும் என்பதே வால்மீகியின் காப்பிய நோக்கம்.

  வால்மீகியின் வழிநூலாக காட்டப்பட்ட காப்பியம் கம்ப ராமாயணம். கம்பனின் ராமகாவியத்தில் நாயகனும், நாயகியும், பாத்திரப் படைப்புகளும் தம்முடைய ஒழுக்கத்தால் உலகோருக்கு நீதிகளை வாரி வழங்கியுள்ளனர். ராமாயணத்தில் தான் எத்தனை எத்தனை நீதிகள். நீதிபதிகள் அனைவரும் இதனைப் படிக்க வேண்டும். ஏனைய தமிழ்ப் புலவர்களுக்கு இல்லாத பெருமை கம்பருக்கு உண்டு. அன்றும் இன்றும் அவர் இலக்கிய வானில் ஓர் ஒளிக்கதிரவன் ஆவார். கம்பன் நீதி பற்றி கூறும் வாசகங்கள் நீதிமன்றத்தில் எழுதப்பட வேண்டும். அறம் காப்பது என்பது இம்மை, மறுமை இரண்டையும் நினைத்துச் செய்ய வேண்டும். அறம் காப்பது என்பது நீதிபதிகளுக்கு இம்மையில் புகழையும் மறுமையில் புண்ணியத்தையும் தரும்.

  ராமனின் தாடகை வதம், சீதையை மாடத்தில் கண்டு காதல் கொண்டதும், ஜானகியை மணந்ததும், தாய் ஏவ கானகம் சென்றதும், வாலியைக் கொன்றதும், ராவணனை வென்றது எல்லாம் அறத்தை நிலை நாட்டுவதற்காகவே. ஆகவே, நீதிபதிகளுக்கெல்லாம் நீதிமான் ராமபிரானே. சட்ட நூல் கம்ப ராமாயணமே. கம்பனின் பெருமை கடல் போன்றது என்றார் ஏ.ஆர்.லெட்சுமணன்.

  கம்பன் கழகத்துக்கு பவள விழாப் பாராட்டாய் தேர்பந்த சித்திரக் கவிதாஞ்சலியை பீ. ரகமத் பீபி வழங்க,

  அதனைப் பெற்றுக் கொள்கிறார், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். லெட்சுமணன்.

  உடன், பேராசிரியை சாரதா நம்பி ஆரூரான் உள்ளிட்டோர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai