Enable Javscript for better performance
மார்ச் 17 இல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்: ஞானதேசிகன்- Dinamani

சுடச்சுட

    
    cong_meet

    காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வரும் திங்கள்கிழமை (மார்ச் 17) வெளியாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் தெரிவித்தார்.

    சத்தியமூர்த்தி பவனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறியது:

    வேட்பாளர் தேர்வு, தேர்தல் பணிகள் குறித்து கடந்த 8 நாள்களாக தில்லியில் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி விட்டு இன்றுதான் (மார்ச் 14) சென்னை திரும்பினேன்.

    காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட 39 தொகுதிகளுக்கும் 1,000-க்கும் அதிகமான மனுக்கள் வந்தன. அதிலிருந்து ஒவ்வொரு தொகுதிக்கும் 4 முதல் 10 வேட்பாளர்களைக் கொண்ட பட்டியல், குலாமநபி ஆசாத் தலைமையிலான வேட்பாளர் தேர்வுக் குழுவிடம் அளிக்கப்பட்டது.

    இக்குழுவில் தமிழகப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே. கோபிநாத் ஆகியோருடன் நானும் (ஞானதேசிகன்) இடம் பெற்றுள்ளேன். இக்குழு பலமுறை ஆலோசனை நடத்தி 39 தொகுதிகளுக்கும் 1 முதல் 3 பேர் வரை கொண்ட பட்டியலை மத்திய தேர்தல் குழுவுக்கு அனுப்பியது.

    கடந்த 12-ஆம் தேதி சோனியா, ராகுல், வீரப்ப மொய்லி, அம்பிகா சோனி, அகமது படேல் ஆகியோரைக் கொண்ட தேர்தல் குழுவில் ஒவ்வொரு வேட்பாளர் பற்றியும் விவாதிக்கப்பட்டு இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    வரும் திங்கள்கிழமை (மார்ச் 17) 39 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என நம்புகிறேன்.

    திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட நான் விருப்பம் தெரிவித்திருந்தேன். ஆனால், தற்போதுள்ள 8 எம்.பி.க்களும் மீண்டும் போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் மேலிடம் முடிவு எடுத்துள்ளது.

    திண்டுக்கல் எம்.பி.யான என்.எஸ்.வி. சித்தன் மீண்டும் போட்டியிட விரும்புவதால் நான் போட்டியிட வாய்ப்பு அமையவில்லை.

    காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்காக தமிழகம் முழுவதும் நான் பிரசாரம் செய்ய இருக்கிறேன்.

    மற்ற கட்சிகளைப் போலவே காங்கிரஸýக்கு பிரசாரம் செய்ய தலைவர்கள் தேவை. மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய வேண்டியிருப்பதால் மூத்த தலைவர்கள் சிலர் தேர்தலில் போட்டியிட முடியவில்லை.

    தனித்துப் போட்டியிடுவது என்பது காங்கிரஸ் கட்சிக்கு புதிதல்ல. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனித்துப் போட்டியிட கிடைத்துள்ள வாய்ப்பை இறைவன் கொடுத்த வரமாகக் கருதுகிறேன் என்றார் ஞானதேசிகன்.

    "விஜயகாந்துக்கு காங்கிரஸ் மீது மரியாதை'

    பாஜக கூட்டணி என்பது கொள்கை முரண்பாடுகளின் மொத்த உருவமாக உள்ளது. ஜாதி, மத உணர்வுகளைத் தூண்டும் கட்சிகள் ஒரே அணியில் இணைந்துள்ளது ஆபத்தானது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தனிப்பட்ட முறையில் எனக்கு மரியாதை உண்டு. அவர் காங்கிரஸ் கூட்டணிக்கு வருவார் என எதிர்பார்த்தேன். காங்கிரஸ் - தேமுதிக கூட்டணி அமைந்திருந்தால் அவரது எதிர்காலம் சிறப்பாக இருந்திருக்கும். விஜயகாந்துக்கு காங்கிரஸ் மீது எப்போதும் மரியாதை உண்டு என்றார் ஞானதேசிகன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai