சுடச்சுட

    
    alagiri_rajini

    நடிகர் ரஜினிகாந்தை, மக்களவை உறுப்பினர் மு.க.அழகிரி திடீரென வெள்ளிக்கிழமை சந்தித்தார்.

    சென்னை, போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் இல்லத்துக்கு மு.க.அழகிரி காலை 10.30 மணிக்கு வந்தார்.

    ரஜினியைச் சந்தித்து சுமார் 20 நிமிஷங்கள் மு.க.அழகிரி பேசினார்.

    பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

    கேள்வி: ரஜினியைச் சந்தித்த நோக்கம் என்ன?

    பதில்: ரஜினி என் நண்பர். அவரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன்.

    கே: ரஜினியோடு என்ன பேசினீர்கள்?

    ப: துரைதயாநிதி அடுத்த படம் தயாரிக்கிறார். அது தொடர்பாகப் பேசினேன். "கோச்சடையான்' படத்தின் டிரைலர் காட்சிகளைப் பார்த்தேன். நன்றாக இருந்தது. அதற்கு வாழ்த்து தெரிவித்தேன். வைரமுத்து எழுதிய பாடல் பிடித்திருந்தது. அதற்காக வைரமுத்துவுக்கும் வாழ்த்து தெரிவித்தேன். அதைப்போல ரஜினிகாந்த் ஒரு பாடல் பாடியிருக்கிறார். நன்றாக இருந்தது. அதற்காக ரஜினியையும் பாராட்டினேன். "கோச்சடையான்' படம் பெரும் வெற்றிபெறும்.

    கே: அரசியல் விவகாரம் பேசினீர்களா?

    ப: அரசியல் பேசவில்லை. ரஜினி என் நலம் விரும்பி. என்னுடைய சொந்த விவகாரங்கள் தொடர்பாக அவரோடு பேசினேன். மன ஆறுதலுக்காகவே ரஜினியைச் சந்தித்துப் பேசினேன்.

    கே: மன்மோகன் சிங்கை சந்தித்தது ஏன்?

    ப: மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்குமாறு பிரதமரிடம் வலியுறுத்தினேன்.

    கே: பாஜகவோடு இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளீர்களா?

    ப: அப்படியெல்லாம் இல்லை என்றார் அவர்.

    அழகிரியின் மகன் துரை தயாநிதி, மாநிலங்களவை உறுப்பினர் கே.பி.ராமலிங்கம் ஆகியோர் உடன் வந்தனர்.

    கரை வேட்டி துறப்பு: தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க.அழகிரி, திமுகவிலிருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இதனால் கருப்பு, சிகப்பு வண்ணம் கொண்ட கரை வேட்டியை அணியாமல் இளம்பச்சை நிறம் கொண்ட கரை வேட்டியையே அணிந்து வந்தார். மாநிலங்களவை உறுப்பினர் கே.பி.ராமலிங்கமும் திமுகவின் கரை வேட்டியை அணியவில்லை.

    பாஜகவுக்கு ஆதரவா?

    புது தில்லி, மார்ச் 14: திமுகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசியதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சந்திப்புக்கு தமிழகத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவர் ஒருவர் ஏற்பாடு செய்துள்ளார்.

    தமிழகத்தின் அரசியல் நிலவரம் குறித்து சுமார் 45 நிமிடங்கள் ராஜ்நாத் சிங்குடன் அழகிரி ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது தமிழக பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிக்கத் தயாராக உள்ளதாக அழகிரி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    அழகிரியின் இந்த புதிய வியூகம் தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவுடன் தேமுதிக கூட்டணி சேர்வதற்கு அழகிரி எதிராக கருத்து தெரிவித்ததனால் ஏற்பட்ட பிரச்னையில், தென் மண்டல அமைப்புச் செயலர் பதவியில் இருந்து அழகிரியை திமுக நீக்கியது.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தில்லி சென்றிருந்த அழகிரி, பிரதமர் மன்மோகன் சிங்கை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, "இந்தச் சந்திப்பில் அரசியல் நோக்கம் கிடையாது என்று கூறினார். மேலும் பாஜக தலைவர்களைச் சந்திக்கும் திட்டம் ஏதுமில்லை. ஆனால் நேரில் யாரையாவது பார்த்தால் பேசாமல் இருப்போமா?' என்று புதிரையும் போட்டார்.

    ஆனால், ராஜ்நாத் சிங்கை அழகிரி சந்தித்து பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜக கூட்டணியில் உள்ள தேமுதிக, மதிமுக, பாமக ஆகிய கூட்டணிக் கட்சிகளுக்கும் அழகிரி ஆதரவு தெரிவிப்பாரா? அல்லது அழகிரியைப் போல் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட மதிமுக பொதுச் செயலர் வைகோ நிறுத்தும் வேட்பாளர்கள் மற்றும் பாஜக வேட்பாளர்களுக்கு மட்டும் ஆதரவு தெரிவிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அழகிரிக்கு கணிசமான ஆதரவு உள்ளது. திமுகவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக 2001ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக போட்டி வேட்பாளர்களை அழகிரி நிறுத்தினார். இதனால் தென் மாவட்டங்களில் 12 தொகுதிகளில் திமுகவுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது.

    இதேபோல் வரும் மக்களவைத் தேர்தலிலும், அழகிரி வேட்பாளர்களை நிறுத்தினாலோ, அல்லது பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தாலோ திமுகவுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai