சுடச்சுட

    

    கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. இரண்டு நாள்கள் நடக்கும் இந்தத் திருவிழாவில் பங்கேற்பதற்காக ராமேசுவரம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 3,160 பக்தர்கள் 95 படகுகளில் புறப்பட்டுச் சென்றனர்.

    ராமேசுவரத்திலிருந்து 18 கடல் மைல் தொலைவில் இந்திய-இலங்கை இடையேயான கடல் பகுதியில் கச்சத்தீவு அமைந்துள்ளது. இங்குள்ள புனித அந்தோணியார் கோயில் திருவிழாவை இருநாட்டு மீனவர்களின் குடும்பத்தினரும் இணைந்து ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.

    இக்கோயிலின் இந்தாண்டு திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் நெடுந்தீவு பாதிரியார் அமல்ராஜ், ராமேசுவரம் வேர்க்காடு பங்குத்தந்தை சகாயராஜ் தலைமையில் யாழ்ப்பாணம் மறை மாவட்ட பேராயர் செüந்திரநாயகம் சனிக்கிழமை மாலை 4 மணியளவில் கோயில் முன்பு கொடியேற்றி விழாவைத் துவக்கி வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து, திருப்பலி பூஜைகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சிறப்பு திருப்பலி பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து தேர்ப்பவனியும், பின்னர் கொடியிறக்கம் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    இரண்டு நாள்கள் நடைபெறும் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 2,466 ஆண்கள், 528 பெண்கள், 166 குழந்தைகள் உள்பட மொத்தம் 3,160 பக்தர்கள் சனிக்கிழமை காலையில் ராமேசுவரம் துறைமுக கடற்கரைப் பகுதியில் இருந்து 95 படகுகளில் புறப்பட்டுச் சென்றனர்.

    போலீஸார், உளவுத்துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனைக்குப் பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். படகில் செல்லும் பக்தர்களின் பாதுகாப்புக்காக மீன் துறை அதிகாரிகள் லைப்ஜாக்கெட் வழங்கினர். மேலும், பக்தர்களோடு இந்திய கடற்படை, கடலோர காவல் படை மற்றும் தமிழக கடலோர பாதுகாப்பு போலீஸாரும் சென்று சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.

    பின்னர், பக்தர்களை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக கச்சத்தீவுக்கு அழைத்துச் சென்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai