சுடச்சுட

    

    கள்ளக்குறிச்சியில் ரூ.1.20 கோடியில் தானியக் கிடங்கு: முதல்வர் ஜெயலலிதா

    By dn  |   Published on : 16th March 2014 11:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், ரூ.1.20 கோடியில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் தானியங்களை சேமிக்கும் வகையில் கிடங்கு அமைக்கப்பட்டு வருவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

    கள்ளக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக பிரசாரக் கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதா பேசியது:

    கள்ளக்குறிச்சி பகுதியில், வெள்ளிமலையை மையமாகக் கொண்டு ஒரு குறு வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் சின்னசேலத்தை தலைமையிடமாகக் கொண்டு ஒரு வட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு பொதுமக்கள் நீண்டதூரம் செல்ல வேண்டிய அவசியமில்லை.

    மேலும் கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.20 கோடியில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட தானியக் கிடங்கை அமைத்து வருகிறோம். ÷அதேபோல் 26 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்சாதனக் கிடங்கு ரூ.31.20 லட்சத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மையத்தை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கள்ளக்குறிச்சி அருகே சேந்தநாடு, அம்மங்களத்தூர் ஆகியப் பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது.

    அம்மங்களத்தூரில் கட்டடப் பணிகள் முடியும் தறுவாயில் உள்ளது. ரிஷிவந்தியம் ஆரம்ப சுகாதார நிலையமும் மேம்படுத்தப்பட்டுள்ளது என்றார் ஜெயலலிதா.

    கூட்டத்தில் ஊரக தொழில்துறை அமைச்சர் ப.மோகன், முன்னாள் அமைச்சர் வரகூர் அருணாச்சலம், ஒன்றியச் செயலர்கள் அ.ராஜசேகர், வே.அய்யப்பா, நகர்மன்றத் தலைவர் கோ.பாலகிருஷ்ணன், நகரச் செயலர் எம்.பாபு உள்பட பலர் பங்கேற்றனர்.

     

    எம்.ஜி.ஆர். பாடலை பாடி பிரசாரம்

    கள்ளக்குறிச்சி பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்க, சரியாக மாலை 4 மணி அளவில் முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டர் மூலம் வந்தார். மாலை 4.05-க்கு கூட்ட மேடையில் ஏறினார்.

    மேடை ஏறிய உடனே ஜெயலலிதா பேசத் தொடங்கினார். தனது பேச்சின்போது அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். செய்வீர்களா? என்ற வினாவை தவறாமல் கேட்டு மக்களிடம் இருந்து சாதகமான பதிலை பெற்றார்.

    தனது உரையில், மத்திய காங்கிரஸ் அரசையும், திமுகவையும் கடுமையாக ஜெயலலிதா விமர்சித்தார். மற்ற கூட்டணிகள் குறித்து அவர் எதுவும் பேசவில்லை. மற்ற கட்சிகளுக்கு வாக்களித்தால் வாக்குகள் சிதறும் என்று மட்டும் கூறினார்.

    ஜெயலலிதா தனது பேச்சின்போது, அமைதி, வளம், வளர்ச்சி என்ற கருத்தை வலியுறுத்தினார். இம் முழக்கங்கள் கூட்டமேடையின் பின்புறத்திலும் எழுதப்பட்டிருந்தன.

    திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை 40 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியபோது, தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.

    ஜெயலலிதா தனது பேச்சை முடிக்கும்போது, எம்.ஜி.ஆர். நடித்த "மன்னாதி மன்னன்' படத்தில் வரும் "அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா' என்ற பாடலை சில வரிகள் பாடினார்.

    ஜெயலலிதாவை பார்க்க ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு முன்னேறியதால் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. போலீஸார் உடனடியாக நெரிசலை சரி செய்தனர்.

     

    கள்ளக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க. தொண்டர்களில் ஒரு பகுதியினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai