Enable Javscript for better performance
குடும்பத்தின் லாபத்துக்காக இயங்கும் நிறுவனம் திமுக: ஜெயலலிதா குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

  

  குடும்பத்தின் லாபத்துக்காக இயங்கும் நிறுவனம் திமுக: ஜெயலலிதா குற்றச்சாட்டு

  By dn  |   Published on : 16th March 2014 06:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  15tutadmk

  ஒரு குடும்பத்தின் லாபத்துக்காகவும், வளர்ச்சிக்காகவும் இயங்கும் தனியார் நிறுவனமாக திமுக மாறிவிட்டது என தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா குற்றம்சாட்டினார்.

  சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்த திமுக, இப்போது தேர்தல் அறிக்கையில் அதை முற்றிலும் ஒழிப்போம் என்று கூறியிருப்பது மக்களை ஏமாற்றும் வேலை என்றும் அவர் குறிப்பிட்டார்.

  தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில், மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜியை ஆதரித்து அவர் பேசியதாவது:

  பத்தாண்டு கால மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.

  விலைவாசி உயர்வு, பெட்ரோலிய பொருள்களின் விலை உயர்வு, ஏற்றுமதி பாதிப்பு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, அண்டை நாடுகளின் அச்சுறுத்தல் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

  மத்திய காங்கிரஸ் ஆட்சியில் இடம்பெற்ற திமுக தமிழகத்தின் நன்மைக்காக ஒன்றுமே செய்யாமல் ஒரு குடும்பத்தின் லாபத்துக்காகவும், வளர்ச்சிக்காகவும் இயங்கும் நிறுவனமாக மாறிவிட்டது. இப்படிப்பட்ட குடும்பத்துக்காக உழைப்பது இழுக்கு என திமுகவினர் பலர் அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.

  தேர்தல் அறிக்கை- ஏமாற்று வேலை: திமுக தேர்தல் அறிக்கையில் 98 தலைப்புகளில் வாக்குறுதிகள் என்ற பெயரில் புளுகுமூட்டைகளை அவிழ்த்துவிட்டுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. அவை வாக்குறுதிகள் அல்ல. இதுவரை செய்ய முடியாததை தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ளார். அதாவது, தன்னுடைய தோல்விகளை ஒப்புக்கொண்டுள்ளார் கருணாநிதி.

  திமுக தலைவர் கருணாநிதியின் ஆலோசனையைப் பெற்றுதான் மத்திய அரசு செயல்படுகிறது என பிரதமர் மன்மோகன்சிங்கே ஒருமுறை கூறியுள்ளார்.

  பிரதமரின் கூற்றை திமுகவினரும் பலமுறை வழிமொழிந்துள்ளனர். அப்படியிருக்கையில் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததற்கு கருணாநிதிதான் காரணம்.

  திமுக தேர்தல் அறிக்கையில் தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.6 லட்சமாக உயர்த்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. கடந்த 17 ஆண்டு காலமாக மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த திமுக ஏன் இதுவரை அதைச் செய்யவில்லை?

  ஓய்வூதிய பணிக்கொடை, வருங்கால வைப்புத் தொகைகளுக்கு ஏற்கெனவே வருமான வரி விலக்கு இருந்துவரும் நிலையில், அவற்றுக்கு வருமான வரி விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என தேர்தல் அறிக்கையில் திமுக தெரிவித்திருப்பது எவ்வளவு பெரிய மோசடி என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

  சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்த திமுக, இப்போது தேர்தல் அறிக்கையில் அதை முற்றிலும் ஒழிப்போம் எனக் கூறியிருப்பது மிகப்பெரிய கபட நாடகம், ஏமாற்று வேலை.

  முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிமுகதான் வழங்கியது என நான் பொய் சொல்லியிருப்பதாக கருணாநிதி கூறியுள்ளார். 2006-இல் எனது தலைமையிலான ஆட்சியின்போது, முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு அடித்தளம் அமைக்கும் வகையில், மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு பரிந்துரை செய்தோம்; இடஒதுக்கீட்டுக்கு வித்திட்டது நாங்கள்தான்.

  கரசேவைக்கு ஆள் அனுப்பவில்லை: அயோத்திக்கு கரசேவைக்காக அதிமுக ஆள் அனுப்பியது என திமுக தொடர்ந்து பொய் பிரசாரம் செய்து வருகிறது. இதில், எள்ளளவும் உண்மை இல்லை. கோயபல்ஸ் பாணியில் தொடர்ந்து பொய் கூறி வருவதை கருணாநிதி நிறுத்திக்கொள்ள வேண்டும்.

  மத்தியில் ஆட்சி மாற்றம் தேவை. மத்தியில் வலிமையான அரசு அமைய அதிமுகவின் கரங்களைப் பலப்படுத்துங்கள். இலங்கையில் தமிழினம் அழிக்கப்பட்டதற்கு உறுதுணையாக இருந்த குற்றவாளிகளுக்கு ஐ.நா. சபை மூலம் தண்டனை பெற்றுத் தரவும், தமிழை ஆட்சிமொழியாகக் கொண்டுவரவும், வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை கொண்டு வரவும், காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் புரிந்தவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் முதல்வர் ஜெயலலிதா.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai