சுடச்சுட

    

    தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளைக் கண்டித்து சேலத்தில் வணிகர்கள் கடையடைப்புப் போராட்டம்

    Published on : 16th March 2014 04:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    shop-strike

    தேர்தல் நடத்தை விதிகளைக் காரணம் காட்டி, வர்த்தகர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்வதைக் கண்டித்து, சேலம் மாவட்ட வணிகர்கள் சனிக்கிழமை கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழகத்தில் ஏப்ரல் 24-ஆம் தேதி மக்களவைக்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் செல்பவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாவிட்டால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    தேர்தல் அதிகாரிகளின் இந்த நடவடிக்கை, தங்களின் வியாபாரத்தைப் பெருமளவில் பாதிப்பதாக சேலம் நகர அனைத்து வணிகர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியது.

    இதுதொடர்பாக சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடையடைப்புப் போராட்டம் நடத்தி தேர்தல் ஆணையத்தின் கவனத்தை ஈர்க்கப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தது.

    அதன்படி, சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை முதல் பல்வேறு இடங்களில் வியாபாரிகள், வணிகர்கள் தங்களது கடைகளை அடைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாநகரில் மொத்த வியாபாரம் நடைபெறும் இடங்களான செவ்வாய்ப்பேட்டை, லீ பஜார், அக்ரஹாரம், கடை வீதி ஆகிய பகுதிகளிலும், மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் காரணமாக அரிசி, பருப்பு, வெல்லம் உள்ளிட்ட உணவுப் பொருள்கள், ஜவுளி, நகைகள் என ரூ.50 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக அனைத்து வணிகர்கள் சங்கப் பொதுச் செயலர் ஜெயசீலன் தெரிவித்தார்.

    நாமக்கல்லில் ஆதரவு இல்லை: நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்திவேலூர், ராசிபுரம் என நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் என அனைத்தும் சனிக்கிழமை காலை முதல் வழக்கம் போல திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது.

    இதுகுறித்து நாமக்கல் வட்டார வணிகர்கள் சங்கத்தின் கௌரவத் தலைவர் சிவஞானம் கூறியது: தேர்தல் ஆணைய கெடுபிடிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அடுத்த வாரம் தமிழக அளவில் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்க நாமக்கல் வணிகர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இதனால், சேலம் வணிகர்கள் சங்க நிர்வாகிகள் அறிவித்த கடையடைப்புப் போராட்டத்தில் நாமக்கல் மாவட்ட வணிகர்கள் பங்கேற்கவில்லை என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai