சுடச்சுட

  

  பாஜக ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினர் நலனுக்காக தனி இலாகா இருக்குமா? ப.சிதம்பரம் கேள்வி

  By dn  |   Published on : 16th March 2014 04:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pc

  பாஜக ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினர் நலனுக்காக தனி இலாகா இருக்குமா என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம்  கேள்வி எழுப்பினார்.

   காளையார்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்ற சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மையினர் மாநாட்டில் அவர் பேசியதாவது:

   கல்வியில், வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்பதில் தவறில்லை. கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் என ஏனைய சிறுபான்மையின மக்கள் 17 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களைப் புறக்கணித்துவிட்டு ஒரு அரசு அமையுமா என்ற கேள்வியைத் தொடர்ந்து கேட்பேன். 1951-இல் அரசியல் சாசனத்தில் நேரு, காமராஜர் போன்றோர் திருத்தம் செய்ததால்தான் 60 ஆண்டுகளுக்குப் பிறகும் இட ஒதுக்கீடு உரிமை கோர முடிகிறது. அதனால்தான் சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு கிடைத்து ஓரளவு உயர்ந்திருக்கிறார்கள். அனைத்து மக்களுக்கும் சமூக நீதி கிடைத்துவிட்டதாக கூற முடியாது. அது கிடைக்கும் வரை அனைத்து மக்களுக்கும் காவலனாக காங்கிரஸ் கட்சிதான் இருக்க முடியும்.

   காங்கிரஸ் கட்சி ஆட்சி இல்லாமல் பாஜக ஆட்சி அமைந்தால் சிறுபான்மையினர் தனி இலாகா இருக்குமா அல்லது தகர்க்கப்படுமா என்ற கேள்வியை கேட்கிறேன்.

   நாடு முழுவதும் 121 மாவட்டங்களில் சிறுபான்மையினர் வாழும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு 23,894 கல்விக் கட்டடங்கள் கட்டித் தரப்பட்டுள்ளன. 33,812  பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு காரணம் காங்கிரஸ் அரசுதான். மேலும் 2 கோடியே 95 லட்சம் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு ரூ.5,412 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

   இந்த சூழ்நிலையில் நரேந்திர மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பாஜக ஆட்சி அமைந்தால் பொது சிவில் சட்டம் கொண்டுவருவதாக கூறுகிறார்.

  பாஜக பேசுவதெல்லாம் எவ்வாறு முக்கியமோ, அவர்கள் பேசாததும் மிகவும் முக்கியம். அதனால் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவைக்கும், மக்களவைக்கும் ஒரு இஸ்லாமியரைக் கூட போட்டியிட நிறுத்தியதில்லை என்றார்.

   மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் சிறப்புரையாற்றினார். மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ப. சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். முன்னாள் சட்டபேரவை உறுப்பினர்கள் வி. ராஜசேகரன், கேஆர். ராமசாமி, ராம. அருணகிரி, என். சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai