சுடச்சுட

    

    பாஜக கூட்டணியில் சிக்கல் தீர்ந்தது: தொகுதிகள் இன்று அறிவிப்பு

    By dn  |   Published on : 16th March 2014 06:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    1

    பாஜக கூட்டணியில் கடந்த சில நாள்களாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளதாக அக்கட்சியின் தமிழகத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை தெரிவித்தார்.

    தமிழகத்தில் தேமுதிக, பாமக, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை பா.ஜ.க. கூட்டணியில் இணைந்துள்ளன. கூட்டணியில் சேர ஒப்புக் கொண்டாலும் இக்கட்சிகளுக்கு தொகுதிகளைப் பங்கீடுவதில் இழுபறி நீடித்தது.

    மார்ச் 7-ஆம் தேதி தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை பாஜக தொடங்கியது.

    மார்ச் 8-ஆம் தேதி தேமுதிக இளைஞரணித் தலைவர் எல்.கே. சுதீஷ் உள்ளிட்டோர் பாஜக அலுவலகமான கமலாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

     பிறகு தேமுதிக சார்பில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் அழகாபுரம் மோகன்ராஜ், வெங்கடேசன், அருள்செல்வன் ஆகியோர் பாஜக தலைவர்களுடன் பேச்சு நடத்தினர். இந்நிலையில் மார்ச் 14-ஆம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்கப் போவதாக விஜயகாந்த் அறிவித்ததால், அதற்குள் தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்ய பாஜக நினைத்தது. ஆனால், ஒரு சில தொகுதிகளை மூன்று கட்சிகளும் பிடிவாதமாகக் கேட்டதால் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய முடியவில்லை.

    அறிவித்தது போல வெள்ளிக்கிழமை பிரசாரத்தை தொடங்கிய விஜயகாந்த், திருவள்ளூர் (தனி), வட சென்னை, மதுரை, திருச்சி, நாமக்கல் ஆகிய 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்களையும் அறிவித்தார்.

    3 இடங்களில் பிரசாரம் செய்த, அவர் பாஜக கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. இதனால் கூட்டணியில் தேமுதிக நீடிக்குமா? என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து பாஜக தேசியப் பொதுச்செயலாளர் முரளிதரராவ், மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல. கணேசன், மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் எஸ். மோகன்ராஜுலு ஆகியோர் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினர்.

    பல மணி நேர ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முரளிதரராவ் "பாமக, மதிமுகவுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தேமுதிக குறித்து பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் முடிவு செய்வார்' என்றார்.

    அதனைத் தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன், மோகன்ராஜுலு ஆகியோர் தேமுதிக தலைவர் விஜயகாந்த், எல்.கே. சுதீஷுடன் சனிக்கிழமை காலை பேச்சு நடத்தினர். அதுபோல பாமக, மதிமுக தலைவர்களுடனும் பேச்சு நடத்தினர்.

    தேமுதிகவுக்கு - 14, பாஜக, பாமகவுக்கு தலா 8, மதிமுகவுக்கு 7, கொங்குநாடு மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 1, புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸýக்கு 1 என மொத்தம் உள்ள 40 தொகுதிகளும் முடிவு செய்யப்பட்டதாக பாஜக தலைவர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் நீடித்து வந்த சிக்கல் தீர்ந்தது. தொகுதிகளின் எண்ணிக்கை சுமூகமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. சில தொகுதிகளை விட்டுக்கொடுக்க கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் முன்வந்துள்ளன. எனவே, தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும் என்றார்.

    திருப்பூர் தொகுதியை விட்டுக்கொடுத்த தேமுதிக: திருப்பூர் தொகுதி  யாருக்கு என்பது தொடர்பாக பாஜகவுக்கும், தேமுதிகவுக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக சனிக்கிழமை (மார்ச் 15) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் திருப்பூர் தொகுதியை விட்டுக் கொடுக்க தேமுதிக ஒப்புதல் அளித்தது. இதையடுத்து திருப்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    விஜயகாந்துக்கு பாராட்டு: பா.ஜ.க. வுடன் கூட்டணியை உறுதி செய்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு, பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க. பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி, மதிமுக தலைவர் வைகோ, பா.ம.க. தலைவர்களில் ஒருவரான அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்தனர். ஆற்காடு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணியை உறுதி செய்த தகவலை விஜயகாந்த் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

     

    தொகுதிப் பங்கீடு: உத்தேசப் பட்டியல்
    பாஜக கூட்டணியில் தேமுதிகவுக்கு 14, பாஜக, பாமகவுக்கு தலா 8, மதிமுகவுக்கு 7, கொங்குநாடு மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சிக்கு தலா 1, புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸூக்கு 1 என உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. எந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த உத்தேசப் பட்டியல்:

     

    தேமுதிக (14)

    திருவள்ளூர் (தனி)

    வட சென்னை

    மதுரை

    சேலம்

    திருச்சி

    திருநெல்வேலி

    விழுப்புரம் (தனி)

    கள்ளக்குறிச்சி

    திருவண்ணாமலை

    பொள்ளாச்சி

    நாமக்கல்,

    திண்டுக்கல்

    கடலூர்

    வேலூர் அல்லது

    தஞ்சாவூர்

     

    பாஜக (8)

    கன்னியாகுமரி

    தென்காசி (தனி)

    ராமநாதபுரம்

    சிவகங்கை

    தென் சென்னை

    கோவை

    ஸ்ரீபெரும்புதூர் அல்லது

    மயிலாடுதுறை

    திருப்பூர்

     

    பாமக (8)

    ஆரணி

    அரக்கோணம்

    தருமபுரி

    கிருஷ்ணகிரி

    சிதம்பரம் (தனி)

    மயிலாடுதுறை அல்லது

    ஸ்ரீபெரும்புதூர்

    நாகப்பட்டினம் (தனி)

    வேலூர் அல்லது

    தஞ்சாவூர்

     

    மதிமுக (7)

    காஞ்சிபுரம் (தனி)

    நீலகிரி (தனி)

    ஈரோடு

    விருதுநகர்

    தேனி

    தூத்துக்குடி

    மத்திய சென்னை

    கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி (1)

    கரூர்

    இந்திய ஜனநாயகக் கட்சி (1)

    பெரம்பலூர்

    என்.ஆர். காங்கிரஸ் (1)

    புதுச்சேரி

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai