சுடச்சுட

    

    முதல்வர் ஜெயலலிதாவின் தொடர் நடவடிக்கைகள்: கடலோர மாவட்ட மீனவர்கள் நிம்மதி

    By dn  |   Published on : 16th March 2014 04:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jaya13

    தமிழக மீனவர்கள் பிரச்னையில் முதல்வர் ஜெயலலிதா எடுத்து வரும் தொடர் முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளால் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் அனைவரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

     இலங்கை மீனவர்களுடனான பேச்சுவார்த்தைக்கு முன்பாக, அந்த நாட்டுச் சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற முதல்வரின் உறுதியான நடவடிக்கையே இந்த நிம்மதி பெருமூச்சுக்கு காரணம்.

      இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர் தாக்குதலுக்கு உள்ளாவதும், சிறைபிடிக்கப்படுவதும் வாடிக்கையாக இருந்து வந்தது. மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் போதெல்லாம் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து கடிதங்கள் மூலமாக வலியுறுத்தி வந்தார்.

       ஆனாலும் இந்தப் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை எட்ட உறுதி செய்யப்பட்டது. அதன்படி, இரு நாட்டு மீனவர்களும் அமர்ந்து பேசி இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணலாம் என்ற யோசனையின் அடிப்படையில், பேச்சுவார்த்தைக்கு முதல்வர் ஜெயலலிதா ஏற்பாடு செய்தார். சென்னையில் கடந்த ஜனவரி மாதம் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

       இந்தப் பேச்சுவார்த்தையை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்ல முடியாதபடி இலங்கைக் கடற்படை பெரும் தொல்லைகளை தமிழக மீனவர்களுக்குக் கொடுத்தது. ராமநாதபுரம், புதுக்கோட்டை என கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து அந்த நாட்டுச் சிறைகளில் அடைத்தனர்.

    உறுதியான நடவடிக்கை: தமிழகம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த

    மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை கொழும்பு நகரில் மார்ச் 13 ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் ஒப்புதல் அளித்தார். ஆனால், பேச்சுவார்த்தைக்கு முன்பாக இலங்கை நாட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 177 மீனவர்களும் அவர்களின் 40-க்கும் மேற்பட்ட படகுகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்று அவர் அறிவிப்புச் செய்தார்.

        இதற்கு இலங்கை அரசு செவிசாய்க்காததால் திட்டமிட்டபடி மார்ச் 13 ஆம் தேதியன்று பேச்சுவார்த்தை நடத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டது.

    ஆனாலும், தமிழக மீனவர்களை விடுவித்து பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்ல முதல்வர் ஜெயலலிதா சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு தொடர் வலியுறுத்தல்கள் தமிழக அரசின் சார்பில் அளிக்கப்பட்டது.

       இதையடுத்து, இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 170-க்கும் மேற்பட்ட மீனவர்களை அந்த நாட்டு அரசு விடுவித்துள்ளது. இதனால், இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை ஒரு சுமுக சூழ்நிலையில் நடைபெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையை மார்ச் 25- ஆம் தேதியன்று கொழும்பு நகரில் நடத்த முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார்.

    முதல்வரின் நடவடிக்கைக்கு பாராட்டு: தமிழக மீனவர்கள் பிரச்னையில் தொடக்கம் முதலே முதல்வர் ஜெயலலிதா எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, ஆளுநர் கே.ரோசய்யா சட்டப் பேரவையில், தான் ஆற்றிய உரையில், இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை விடுவிக்கும் விஷயத்திலும், கச்சத்தீவை மீட்டெடுக்கும் விவகாரத்திலும் முதல்வர் ஜெயலலிதா அயராது பணியாற்றி வருகிறார் என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

        அவரது பாராட்டை மெய்ப்பிக்கும் வகையில், கொழும்பு நகரில் முதல்வர் ஜெயலலிதாவின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தையில் ஒரு முடிவு ஏற்பட்டு அதனால் தமிழக மீனவர்களின் வாழ்வு அச்சமற்றதாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai