சுடச்சுட

  
  16dmdk

  நாட்டில் ஊழலை ஒழிக்க நரேந்திர மோடியால் மட்டுமே முடியும். அவர் தமிழ்நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் நல்லது செய்வார் என்ற நம்பிக்கையோடு நானும், கூட்டணிக் கட்சிகளும் இணைந்துள்ளோம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

  ஆற்காடு பஸ் நிலையத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், அவர் பேசியது:

  பாஜகவுடன் தேமுதிகவின் கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்தியா வல்லரசு நாடாக வேண்டும் என ஆசைப்பட்டோம். நாடு வல்லரசாக வேண்டுமெனில் ஊழல் இருக்கக் கூடாது. ஊழலை ஒழித்திடுவோம், ஊழல் எதிர்ப்பு மாநாட்டை முதன்முதலில் நடத்தியது தேமுதிக. அந்த ஊழலை எதிர்க்கும் ஒரே சக்தி நரேந்திர மோடிதான்.

  குஜராத் மாநிலம் மோடியால் வேகமான வளர்ச்சி அடைந்துள்ளதை நேரடியாகப் பார்த்திருக்கிறேன். தமிழக மக்களுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கையில் நரேந்திர மோடியுடன் கூட்டணி அமைத்துள்ளோம். அந்த நம்பிக்கை என்றும் கெடாமல் இருக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் நல்லது செய்வார் என்ற நம்பிக்கையோடு தேமுதிகவும், கூட்டணி கட்சிகளும் இணைந்துள்ளோம்.

  அதிமுக, திமுக இருக்கும் வரை தமிழ்நாடு உருப்படாது. லோக் ஆயுக்த நாடு முழுவதும் வந்தாலும், தமிழ்நாட்டில் வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவிப்பது திமுகவும், அதிமுகவும்தான்.

  சாலை வசதி இல்லை, விவசாயம் அழிந்து வருகிறது, மணல் கொள்ளை, தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை.  வறட்சி மாநிலமாக அறிவிக்கவா ஒரு முதல்வர் வேண்டும். அம்மா குடிநீர், அம்மா உணவகம், அம்மா மருந்தகம் என வைத்தவர்கள், எதற்காவது எம்ஜிஆர் பெயரை வைத்திருக்கிறார்களா?

  நல்லது நடக்க வாக்கு கேட்கிறோம்!: பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் தங்க நாற்கரச் சாலை போடப்பட்டது. அந்த சாலை மக்களுக்கு பயன்படுகிறது. அப்படி மக்களுக்கு பயன்படும் வகையில் நல்லது நடக்க வேண்டும் என்பதற்காகவே உங்களிடம் வாக்கு கேட்க வந்திருக்கிறேன்.

  கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களையும் ஏற்பேன்!: கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் யார், யார் எங்கு நிற்கிறார்கள் என்பதை அறிவிப்பார்கள். பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்று எண்ணாமல் அவர்கள் யாராக இருந்தாலும் ஏற்றுக் கொள்வேன். எனக்கு பிடித்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள்தான். அவர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றார்.

  கூட்டத்தில் உள்ளூர் பிரச்னைகள், விவசாயிகள் பிரச்னை, நெசவாளர் பிரச்னை உள்ளிட்டவை குறித்து பார்வையாளர்கள் கூறினர். அப்போது தனது பேச்சை நிறுத்தி, அவர்கள் சொல்வதை விஜயகாந்த் கேட்டுக் கொண்டார்.

  கூட்டத்தில்  எம்எல்ஏ பி.ஆர் மனோகர், தேமுதிக மாவட்டச் செயலர் எஸ்.நித்யா, மாவட்டத் துணைச் செயலர் ஜெமினி ராமச்சந்திரன், ஒன்றியச் செயலர் காசிநாதன், நகரச் செயலர் பிரபு, மதிமுக மாவட்டச் செயலர் பி.என் உதயகுமார், நகரச் செயலர் பி.ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai